
அறுபது வருட வரலாற்றை பதிவு செய்ததற்காகவே
எழுத்தாளர் இரா. முருகவேள் அவர்களை பாராட்ட வேண்டும். சுதந்திரம் அடைந்தபின்
இந்திய அரசின் உடனடி வளர்ச்சித் தேவைக்கு அரசு திறந்த வாசல்கள் அதை உள்ளூர்
முதலாளிகள் பயன்படுத்திக்கொண்ட விதம் என அனைத்தும் ஆவணங்கள். கச்தூரிசாமியும்,
சௌதலாவும் இணைந்து ஒரு அறைக்குள் மிகப்பெரும் சாம்ராஜியத்திற்கான கட்டமைப்பை
உருவாக்கும் இடத்தில் நாவல் முழுத்திறனோடு இயங்கத் துவங்குகிறது.
தொழிற்சாலையில் ஓராண்டு பயிற்சிக்கு பின் மாத
சம்பளம் ரூ 165 பெற்ற பாட்டாளியின் கொண்டாட்டங்களும் அதன் விவரணைகளும் ஆஹா! எளிய
மக்களின் கொண்டாட்டங்களில் நாமும் பங்குபெற்ற உணர்வைத் தருகிறது. விஸ்கோஸ் ஆலையின்
வரலாறு, தொழிற்சங்க வரலாறு, சுற்றுச்சூழல் போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு என இவை
அனைத்தும் கோவையின் அறுபது ஆண்டுகால வரலாற்றை பதிவுசெய்கிறது. இன்றைக்கு நாம்
சந்திக்கும் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு காரணமான தொழில்நுட்பங்கள்,
அன்றைக்கு புதிய தொழில்நுட்பங்களாக அறிமுகப்படுத்தப்பட்ட விதம், அதன்பின் அவை பாதை
மாறிய விதம் என ஒரு பரந்த பார்வையை நமக்கு தருகிறது.
ஆலையிலிருந்து இரண்டாயிரம் அடிக்கு மேல்
சுத்தமாக வரும் அறு ஆலையை கடந்து செல்லும்போது கருப்பு நிறமாக மாறி மக்களின் வாழ்வாதாரத்தை
அசைத்துப் பார்த்து மண்ணை, மக்களை விழுங்கத் துவங்குகிறது. அதனுள் இருக்கும்
சட்டச் சிக்கல்களை, புலப்படாத தொழில்நுட்பங்களை சாதாரண மக்களுக்கும் மிக எளிமையாக
புரியும்படி கதாசிரியர் கொண்டு சேர்த்திருப்பது அவரின் எழுத்திற்காண வெற்றி.
ஆலை மூடப்படுவதோடு போராட்டம் முடிவதில்லை.
இழந்த மண்ணின் வளத்தை மீட்டெடுப்பதில் அடுத்த போராட்டம் துவங்குகிறது. மக்களை
இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்த்தும் அடுத்த தலைமுறை என போராட்டம் தொடர்ந்து
கொண்டே இருக்கிறது. அங்கும் அதை வியாபாரமாக்கும் பெருமுதலாளியின் தலையீடு என முகிலினி
விறு விறுவென நம் சமகாலத்தை வந்தடைகிறது. மொத்தமாக 487 பக்கங்களில்
மூன்று தலைமுறையின் வாழ்கையில் பவானி ஆற்றின் மாற்றம் என முகிலினி புனைவல்ல
வரலாற்று ஆவணம் என்றே என் மனதில் பதிகிறது.
இந்த வரலாற்றை வாசகனுக்கு அயர்ச்சி ஏற்படாத
வண்ணம் கதையாக கோர்த்து அதன் கதைமாந்தர்களை உயிர்ப்புடன் உலவ விட்டிருக்கிறார்
கதாசிரியர். கஸ்தூரிசாமி நாயுடு, ராஜூ, ஆரோன், சௌதலா, மரகதம், மணிமேகலை கெளதம், திருநாவுக்கரசு என கதைமாந்தர்கள் எதையோ
தேடிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும்
பகுதிகளில் இந்த விஸ்கோஸ் ஆலையை எதிர்த்த பகுதிகளே அதிகம் என்பது இன்றைய
தலைமுறையின் அடுத்த நகர்வு.
முகிலினி சலனமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.
மாசுபடிந்து, நிறம் மாறி...
நூல்: முகிலினி
ஆசிரியர்:
இரா.முருகவேள்
பதிப்பகம்:
பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்
No comments:
Post a Comment