தொடரும் தோழர்கள்

Friday, April 13, 2018

கனலி - கவிதைத்தொகுப்பு - விமர்சனம்


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பிறந்து கிருஷ்ணகிரியில் பள்ளிப்படிப்பு முடித்து, சேலத்தில் ஆசிரியர் பட்டத்தை பெற்று 14 வருடங்கள் அரசுப்பள்ளியில் ஆசிரயராக பணிபுரிந்துவிட்டு இப்பொழுது அமீரகத்தில் பணியில் இருக்கும் தோழர் ஷோபியா துரைராஜ், முகப்புத்தகத்தில் கவிதை வளர்க்கும் தமிழாசிரியர்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு கனலி – சற்று வித்தியாசமான பெயர். கனன்று எரிபவர் தன் கவிதைகளில் மெல்லிசை மீட்டியிருக்கிறார். இதற்கு முன் கல்கி, ஜன்னல், அகல் என பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.
உலக உயிர்களுக்கெல்லாம் அடிநாதமான காதலை, அதன் தனிமையை, தன் கவிதைகளில் வடித்திருக்கிறார்.
      அணு அணுவாய் உன்னை
     உணர்ந்ததாலேயே
     என் ஒவ்வொரு அணுவிலும்
     உன்னை உரித்தெடுக்க
     இயலாமல் திகைத்துப் போகிறேன்..
.
என்று தனிமையின் கொடுமையை இவர் கவிதையில் சொல்வதும் அருமை.
    
வேலையின் காரணமாக பிரிந்திருக்கும் காதலனை/கணவனை எண்ணி சங்க இலக்கியங்களில் பல கவிதைகள் உள்ளன, அதிலும் வள்ளுவனின் பிரிவு குறித்த குறள்கள் என்றும் அழியாச் சுடர். இன்றைய இந்த நவீன காலத்தில் பிரிவில் என்ன சிந்தனை ஓட்டம் இருக்கும்? இதோ! அவரே தன் கவிதைகளில்...

நான் அறிய விழைவதெல்லாம்
என்னுடன் நீ பகிர்ந்து கொண்ட
உன் மணித்துளிகளில் எல்லாம் இப்போது
எதை நிரப்பிக் கொண்டிருப்பாய் என்பதைத்தான்

அதீத மகிழ்ச்சியில் ஒரு பதிவு
என் அனர்த்தங்களை உணர்த்திட ஒரு பத்தி
காதல் பொழுதின் ஒரு பதிவு நம்
கூடலின் விளைவின் பல பதிவு
எனக் களமாடிய முகநூலின் பக்கங்களில்
இப்போது நீ என்ன பதிவு
செய்து கொண்டிருப்பாய்?

கவிதைகளுக்கு தலைப்பே கொடுக்காமல் இப்படி மொட்டையாக இருக்கிறதே என்ற எண்ணம் வந்து கொண்டிருக்கும் போதே அதற்கும் ஒரு கவிதை!

ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு தலைப்புக்கு நான் எங்கு செல்வேன்?
ஒரே ஒரு பெயரை மட்டும்
உனக்கிட்ட உன் பெற்றோரைத்தான்
திட்டித் தீர்க்கிறேன்.

எவ்வளவு பெரிய சோகத்தையும் அழுகையில் கரைத்து மீண்டு விடக்கூடிய சக்தி கண்ணீருக்கு உண்டு.

ஒரு பெரும்
அழுகைக்குப் பின்னால்
முளைக்கும் சிறகுகளில்
கனமிருப்பதில்லை.

ஒரு தாயாக தன் மகளை பிரிந்து வாழ்வதின் வலியை    
உச்சி முகர்ந்து
நெஞ்சோடணைத்து
உயிரோடு உன்னை
ஊடுருவிக்கொள்ள
உள்ளம் உன்மத்தம்
கொள்ளுதடி மகளே
கயறு நிலையில்
இமைகள் சுடுகிரதடி

என்கிற இந்தக் கவிதையில் தன் நிலை குறித்து வருந்தி கவி பாடுகிறார்.

இவரது இன்னும் சில அற்புதமான கவிதைகள் வேலை காரணமாக தன் குடும்பத்தை விட்டு விலகி வாழும் பலரது நினைவுகளை சுரண்டிச் செல்கின்றன. அவற்றை நண்பர்கள் புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளவே விட்டுவைக்கிறேன்.

தமிழாசிரியரிடம் மரபுக் கவிதைகளை எதிர்பார்ப்பது மரபு!
மரபுகளை உடைத்தெறிந்து கனலாக தகித்து வலம் வருகிறார் ஷோபியா துரைராஜ்.   

ஷோபியா துரைராஜ் அவர்களின் கவிதை ஆர்வத்திற்கு, துணை நின்று உற்சாகமூட்டி வரும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள். அடுத்த தொகுப்பில் சில மரபுக் கவிதைகளையும் சேர்க்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தங்களின் கவிதைப் பயணம் சிறக்க என் வாழ்த்துகள்.

தோழமையுடன்,
அ. மு. நெருடா.

1 comment:

  1. நல்லதொரு அறிமுகம். கனலி - வித்தியாசமான பெயர். கவிதைகள் மனதைத் தொட்டன.

    ReplyDelete