தொடரும் தோழர்கள்

Wednesday, April 18, 2018

மகளே ஆசிபா!


பள்ளி சென்று
வீடு திரும்பிய 
என் எட்டு வயது மகளை
பதற்றத்துடன் 
வாரி அணைத்தேன்!
மகளே ஆசிபா!

யாருப்பா அது?
என்றாள் மகள்!
அவளும் உன் போல 
அழகு குழந்தை யம்மா 
என்றேன்.. 

அப்போ எனக்கு 
அக்காவா தங்கையா?
கண்கள் பட படக்க
ஆசையாய் ஆவலாய்
கேள்விகள்

உங்கள் இருவருக்கும் 
ஒரே வயது தானம்மா
என்றேன்.
எங்கே அவள் எனக்
கேள்வி வர

கோவிலுக்குள் போனாள் 
சாமியை பார்க்க போனாளோ!
சாமியாக ஆனாளோ

மகளே ஆசிபா!

- அ. மு. நெருடா

Monday, April 16, 2018

முகிலினி – இரா. முருகவேள்


மேற்கு தொடர்ச்சி மலையில் விழுந்து கீழிறங்கி சமதளத்தில் பாய்ந்து ஓடி அதன் படுகைகளில் வாழும் மூன்று தலைமுறை மக்களின் வாழ்கை, போராட்டம், வெற்றி, தோல்வி, அரசியல், இயற்கை, தொழில் என அனைத்துத் தளங்களையும் தொட்டு ஓடுகிறது முகிலினி. பிரம்மாண்டமான அணைக்கட்டின் உருவாக்கத்தில் துவங்கும் இந்நாவல் அதன் உச்ச நிலையை அடைந்து பின் சீராகப் பாய்கிறது. முன்னுரையில் குறிப்பிட்டது போலவே இதை வரலாறாக எடுத்துக்கொண்டால் வரலாறு. புனைவாக நினைத்துகொண்டால் புனைவு.

அறுபது வருட வரலாற்றை பதிவு செய்ததற்காகவே எழுத்தாளர் இரா. முருகவேள் அவர்களை பாராட்ட வேண்டும். சுதந்திரம் அடைந்தபின் இந்திய அரசின் உடனடி வளர்ச்சித் தேவைக்கு அரசு திறந்த வாசல்கள் அதை உள்ளூர் முதலாளிகள் பயன்படுத்திக்கொண்ட விதம் என அனைத்தும் ஆவணங்கள். கச்தூரிசாமியும், சௌதலாவும் இணைந்து ஒரு அறைக்குள் மிகப்பெரும் சாம்ராஜியத்திற்கான கட்டமைப்பை உருவாக்கும் இடத்தில் நாவல் முழுத்திறனோடு இயங்கத் துவங்குகிறது.

தொழிற்சாலையில் ஓராண்டு பயிற்சிக்கு பின் மாத சம்பளம் ரூ 165 பெற்ற பாட்டாளியின் கொண்டாட்டங்களும் அதன் விவரணைகளும் ஆஹா! எளிய மக்களின் கொண்டாட்டங்களில் நாமும் பங்குபெற்ற உணர்வைத் தருகிறது. விஸ்கோஸ் ஆலையின் வரலாறு, தொழிற்சங்க வரலாறு, சுற்றுச்சூழல் போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு என இவை அனைத்தும் கோவையின் அறுபது ஆண்டுகால வரலாற்றை பதிவுசெய்கிறது. இன்றைக்கு நாம் சந்திக்கும் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு காரணமான தொழில்நுட்பங்கள், அன்றைக்கு புதிய தொழில்நுட்பங்களாக அறிமுகப்படுத்தப்பட்ட விதம், அதன்பின் அவை பாதை மாறிய விதம் என ஒரு பரந்த பார்வையை நமக்கு தருகிறது.

ஆலையிலிருந்து இரண்டாயிரம் அடிக்கு மேல் சுத்தமாக வரும் அறு ஆலையை கடந்து செல்லும்போது கருப்பு நிறமாக மாறி மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்து மண்ணை, மக்களை விழுங்கத் துவங்குகிறது. அதனுள் இருக்கும் சட்டச் சிக்கல்களை, புலப்படாத தொழில்நுட்பங்களை சாதாரண மக்களுக்கும் மிக எளிமையாக புரியும்படி கதாசிரியர் கொண்டு சேர்த்திருப்பது அவரின் எழுத்திற்காண வெற்றி.  
ஆலை மூடப்படுவதோடு போராட்டம் முடிவதில்லை. இழந்த மண்ணின் வளத்தை மீட்டெடுப்பதில் அடுத்த போராட்டம் துவங்குகிறது. மக்களை இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்த்தும் அடுத்த தலைமுறை என போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அங்கும் அதை வியாபாரமாக்கும் பெருமுதலாளியின் தலையீடு என முகிலினி விறு விறுவென நம் சமகாலத்தை வந்தடைகிறது. மொத்தமாக 487 பக்கங்களில் மூன்று தலைமுறையின் வாழ்கையில் பவானி ஆற்றின் மாற்றம் என முகிலினி புனைவல்ல வரலாற்று ஆவணம் என்றே என் மனதில் பதிகிறது.

இந்த வரலாற்றை வாசகனுக்கு அயர்ச்சி ஏற்படாத வண்ணம் கதையாக கோர்த்து அதன் கதைமாந்தர்களை உயிர்ப்புடன் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். கஸ்தூரிசாமி நாயுடு, ராஜூ, ஆரோன், சௌதலா, மரகதம், மணிமேகலை  கெளதம், திருநாவுக்கரசு என கதைமாந்தர்கள் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் பகுதிகளில் இந்த விஸ்கோஸ் ஆலையை எதிர்த்த பகுதிகளே அதிகம் என்பது இன்றைய தலைமுறையின் அடுத்த நகர்வு.

முகிலினி சலனமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள். மாசுபடிந்து, நிறம் மாறி...

நூல்: முகிலினி
ஆசிரியர்: இரா.முருகவேள்
பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்

         

Friday, April 13, 2018

கனலி - கவிதைத்தொகுப்பு - விமர்சனம்


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பிறந்து கிருஷ்ணகிரியில் பள்ளிப்படிப்பு முடித்து, சேலத்தில் ஆசிரியர் பட்டத்தை பெற்று 14 வருடங்கள் அரசுப்பள்ளியில் ஆசிரயராக பணிபுரிந்துவிட்டு இப்பொழுது அமீரகத்தில் பணியில் இருக்கும் தோழர் ஷோபியா துரைராஜ், முகப்புத்தகத்தில் கவிதை வளர்க்கும் தமிழாசிரியர்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு கனலி – சற்று வித்தியாசமான பெயர். கனன்று எரிபவர் தன் கவிதைகளில் மெல்லிசை மீட்டியிருக்கிறார். இதற்கு முன் கல்கி, ஜன்னல், அகல் என பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.
உலக உயிர்களுக்கெல்லாம் அடிநாதமான காதலை, அதன் தனிமையை, தன் கவிதைகளில் வடித்திருக்கிறார்.
      அணு அணுவாய் உன்னை
     உணர்ந்ததாலேயே
     என் ஒவ்வொரு அணுவிலும்
     உன்னை உரித்தெடுக்க
     இயலாமல் திகைத்துப் போகிறேன்..
.
என்று தனிமையின் கொடுமையை இவர் கவிதையில் சொல்வதும் அருமை.
    
வேலையின் காரணமாக பிரிந்திருக்கும் காதலனை/கணவனை எண்ணி சங்க இலக்கியங்களில் பல கவிதைகள் உள்ளன, அதிலும் வள்ளுவனின் பிரிவு குறித்த குறள்கள் என்றும் அழியாச் சுடர். இன்றைய இந்த நவீன காலத்தில் பிரிவில் என்ன சிந்தனை ஓட்டம் இருக்கும்? இதோ! அவரே தன் கவிதைகளில்...

நான் அறிய விழைவதெல்லாம்
என்னுடன் நீ பகிர்ந்து கொண்ட
உன் மணித்துளிகளில் எல்லாம் இப்போது
எதை நிரப்பிக் கொண்டிருப்பாய் என்பதைத்தான்

அதீத மகிழ்ச்சியில் ஒரு பதிவு
என் அனர்த்தங்களை உணர்த்திட ஒரு பத்தி
காதல் பொழுதின் ஒரு பதிவு நம்
கூடலின் விளைவின் பல பதிவு
எனக் களமாடிய முகநூலின் பக்கங்களில்
இப்போது நீ என்ன பதிவு
செய்து கொண்டிருப்பாய்?

கவிதைகளுக்கு தலைப்பே கொடுக்காமல் இப்படி மொட்டையாக இருக்கிறதே என்ற எண்ணம் வந்து கொண்டிருக்கும் போதே அதற்கும் ஒரு கவிதை!

ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு தலைப்புக்கு நான் எங்கு செல்வேன்?
ஒரே ஒரு பெயரை மட்டும்
உனக்கிட்ட உன் பெற்றோரைத்தான்
திட்டித் தீர்க்கிறேன்.

எவ்வளவு பெரிய சோகத்தையும் அழுகையில் கரைத்து மீண்டு விடக்கூடிய சக்தி கண்ணீருக்கு உண்டு.

ஒரு பெரும்
அழுகைக்குப் பின்னால்
முளைக்கும் சிறகுகளில்
கனமிருப்பதில்லை.

ஒரு தாயாக தன் மகளை பிரிந்து வாழ்வதின் வலியை    
உச்சி முகர்ந்து
நெஞ்சோடணைத்து
உயிரோடு உன்னை
ஊடுருவிக்கொள்ள
உள்ளம் உன்மத்தம்
கொள்ளுதடி மகளே
கயறு நிலையில்
இமைகள் சுடுகிரதடி

என்கிற இந்தக் கவிதையில் தன் நிலை குறித்து வருந்தி கவி பாடுகிறார்.

இவரது இன்னும் சில அற்புதமான கவிதைகள் வேலை காரணமாக தன் குடும்பத்தை விட்டு விலகி வாழும் பலரது நினைவுகளை சுரண்டிச் செல்கின்றன. அவற்றை நண்பர்கள் புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளவே விட்டுவைக்கிறேன்.

தமிழாசிரியரிடம் மரபுக் கவிதைகளை எதிர்பார்ப்பது மரபு!
மரபுகளை உடைத்தெறிந்து கனலாக தகித்து வலம் வருகிறார் ஷோபியா துரைராஜ்.   

ஷோபியா துரைராஜ் அவர்களின் கவிதை ஆர்வத்திற்கு, துணை நின்று உற்சாகமூட்டி வரும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள். அடுத்த தொகுப்பில் சில மரபுக் கவிதைகளையும் சேர்க்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தங்களின் கவிதைப் பயணம் சிறக்க என் வாழ்த்துகள்.

தோழமையுடன்,
அ. மு. நெருடா.

Tuesday, April 10, 2018

பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)

தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது.

விருதுத் தொகை:
ஒரு ரோஜா பூ மட்டும் /-

(பாலுமகேந்திரா விருது விழாவில் சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு உள்ளிட்ட மொத்தம் பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். பாலுமகேந்திரா விருது குறும்படங்களை ஒரு இயக்கமாக, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான களமாக மாற்றவே உருவாக்கப்பட்டது. எனவே மற்ற குறும்படப்போட்டிகளை போல் பாலுமகேந்திரா விருது நிகழாது. தொடர்ந்து குறும்படங்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் குறும்படங்கள் சார்ந்து பணியாற்ற வேண்டும். அதனை ஒரு அலையாக செயல்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவிலாவது பரிசு பெரும் திரைக்கலைஞர், நான்காவது ஆண்டும் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவில் விருது பெற்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஆனால் இடையில் ஒரு வருடம் இடைவெளி ஏற்பட்டாலும் பரிசுத்தொகை கிடைக்காது. தொடர்ந்து குறும்படத்துறையில் இயங்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இத்தகைய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். மிக முக்கியமாக விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும் பத்து குறும்படங்களும் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தும் சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 க்கு நேரடியாக தகுதி பெரும். சென்னை சுயாதீன திரைப்பட விழா நடைபெறுவதற்கு முன்னரும் குறும்படங்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு வெளிவரும். ஆனால் அப்போது பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று திரையிட தெரிவான பத்து குறும்படங்களை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அந்த குறும்படங்கள் நேரடியாக IFFC யில் பரிசுக்குரிய பிரிவில் திரையிடப்படும்.

விதிமுறைகள்:
* பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- "PADACHURUL" என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD யாக, கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் படத்தை கொடுக்க விரும்புபவர்கள், 250 பணத்தை கொடுத்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.
* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.
* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
* இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.
* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
* குறும்படங்கள் 01.01.2013 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஒருவர் எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒரு குறும்படத்திற்கு 250 ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள், அலைப்பேசி அழைப்புகள் அனுமதிக்கப்படமாட்டாது.
* ஆவணப்படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* விருது விழா பாலுமகேந்திரா பிறந்த தினமான மே 19ஆம் தேதி நடைபெறும்.
* விருதுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 03, 2018

* குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கே அருகில்.

குறும்பட விழா தொடர்பாக எவ்வித கடிதப்போக்குவரத்தும், அலைப்பேசி அழைப்பும் தேவையில்லை. படங்களை அனுப்பும்போது உங்கள் முகவரி, அலைப்பேசி எண்களை சரியாக எழுதி அனுப்புங்கள். விருது விழா பற்றிய அறிவிப்பு தமிழ் ஸ்டுடியோ இணையதளத்திலும், முகநூலிலும் வெளிவரும். தவிர படங்களை அனுப்பும் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.
--
அன்புடன்

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

Wednesday, March 28, 2018

வெள்ளாயி - சிறுகதை

நார்க் கட்டில் முதுகில் சுருக் சுருக்கென குத்தினாலும் இதமாய்  தான் இருந்தது. துண்டை விரித்துபோட்டு  தலைக்கு கையை வைத்துப் படுத்து, தலைக்கு மேல் பச்சைப் போர்வையில் துளித்துளியாய் மஞ்சள் நிறத்தில் முத்து கோர்த்தது போல காற்றில் அலைந்து கொண்டிருந்த  வேப்பம்பழங்களை பார்த்துக்கொண்டே முன்னர் இதனருகில் ஒரு பெரிய மாமரம் இருந்தது நினைவுக்கு வந்தது! 


சிறுவயதில் இங்கு வரும்போது முத்துவீரும் நானும் அதில் ஏறி விளையாடுவோம். நகரத்திலிருந்து வந்ததாலோ என்னவோ அவன் என்னை சிறப்பாய் கவனிப்பான். ஓடி ஓடிச் சென்று எனக்கு தின்பதற்கு எதையாவது கொண்டு வந்து தருவான். கிராமத்தில் வளர்வதால் அவனைவிட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் எனக்கு மேலெழும். சாதாரண விஷயத்தைக்கூட தெரியாது என பந்தா காட்டுவது நகரவாசிகளுக்கு பழக்கம். அணில் கொரித்து போட்ட பழம் மற்றதை விட சுவை கூடுதலாக இருக்கும். பார்க்க காய் போல இருந்தாலும் உள்ளே நன்கு பழுத்திருக்கும். அணிலுக்கு எப்படி இந்தப் பழம் பழுத்துவிட்டது என்று தெரியும் என நினைத்து ஆச்சர்யப்படுவேன். மேலே பறவைகள் கூடு கட்டியிருக்கும். எப்பொழுதும் குஞ்சுப் பறவையின் ஒலி கேட்ட வண்ணம் இருக்கும். இன்று அந்த மாமரம் இல்லை.    


யையா ராசா! பொட்ட வெயில்ல இப்படி படுத்து கிடக்குற உள்ள வந்து படுயா! உம்பொண்டாட்டி வந்தா  வையப்போறாயா!


அப்பத்தாளின் குரல்! 

அப்பத்தாளுக்கு வயது 87 இருக்கும். வயதேறியதால் குரலில் ஒருவித அதிர்வு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. வெற்றிலை போட்டு கரையேறிய வாய். முன் பல் இரண்டு மட்டும் விழாமல் கெட்டியாய் பிடித்துக்கொண்டு இருக்கிறது.  எதையாவது பேசிக்கொண்டு, முனுமுனுத்துக்கொண்டே அவள் அம்பாரியில் பவனி வருவது போல முன்னும் பின்னும் ஆடி ஆடி வெற்றிலையை இடித்துக்கொண்டு இருப்பாள். அந்தச் சிறு உரலுக்கும் அப்பத்தாளின் கைகளுக்கும் அப்படி ஒரு உறவு! எத்தனை முறை இடிபட்டாலும் அப்பத்தாளின் கையின் மேல் கோபம் கொண்டதே இல்லை. பார்வை மங்கிய பின்னும் சீரான தாளத்தில் ஒரே வலுவில் இடித்துக்கொண்டே இருப்பாள்.   இயல்பாகவே அவள் பேச்சில் ஒரு ராகம் இருக்கும். சிறுவயதில் அப்பத்தா எங்கள் வீட்டிற்கு வரும்போது எல்லாம் 


அப்பத்தா! கொண்டா நான் இடிச்சு தரேன்! 


என்று சொல்லி வாங்கி, இடிக்க உட்கார்ந்தால்! கதைகள் ஒவ்வொன்றாக வரத்துவங்கும். கதை கேட்க சிறந்த நேரம் அதுதான். அப்பத்தா அவளது, வெளுத்த தலைமயிரை, தூக்கி முடிந்த கொண்டையை ஆட்டி ஆட்டி கதை சொல்லும் பொழுது தண்டட்டிகள் காற்றில் ஊஞ்சல் ஆடும். நான் அதை பார்த்துக்கொண்டே இடிப்பேன். அவளது காது மடல் தொட்டுப் பார்த்தால் மிருதுவான கொழுப்பு போல இருக்கும். இடித்துத் தந்த வெற்றிலையை  உருட்டி வாயில் போட்டு ஒரு சுழற்று சுழற்றி தன் நாக்குச் சிவப்பை காண பல்லில்லா வாயை குவித்து நாக்கை நீட்டி அவள் அதன் நிறத்தை பார்க்கும் அழகே தனி. சுண்ணாம்பு போதவில்லை என்றால் சிறு முத்தளவு எடுத்து வாயில் திணித்து சேர்த்து அவள் அதை மென்று குதப்பி கதை சொல்லத் துவங்குவாள். கதை என்றால் அது கற்பனையா? இல்லை உண்மையில் நிகழ்ந்தது என்று சத்தியமே செய்வாள். அவள் பெரும்பாலும் அரசர் கதைகளையே சொல்வாள். ஒவ்வொரு கதையிலும் அரசரின் வீர பிராதாபங்கள் பளிச்சிடும். கதை முடிந்ததும் கதைக்கேற்ப நான் நம்பும்படி  ஏதாவது ஒரு ஆதாரத்தை காட்டுவாள். அப்படித்தான் ஒரு முறை ராஜா வீட்டு கல்யாணக் கதையை சொல்லிவிட்டு,  அந்த ராசா வீட்டு கல்யாணத்துல எங்க எல்லாருக்கும் பொடவ எடுத்து கொடுத்தாவ! அந்த சீல தான் இது!


எனத் தான் உடுத்தியிருக்கும் தண்ணீர் பார்த்து பல நாள் ஆன சீலையை, ஏதோ ஆடை விளம்பர அழகி போல் காற்றில் விரித்து அலைய விடும் பொழுது அப்பத்தா உண்மையில் பேரழகி தான்.                 

யய்யா! சொன்ன கேளுயா! இப்புடி வெட்ட வெளியில படுத்து கிடந்தா கருத்து போயிடுவயா! 


என்று என்னை பின்நினைவில் இருந்து மீட்டேடுத்தாள் அந்தப் பேரழகி!


நீ போ அப்பத்தா! நான் நிழல்ல தானே படுத்துருக்கேன்!
ஒன்னும் சொல்லமாட்டா! நாம்பாத்துகிறேன் அப்பத்தா! 
நீ வெயில்ல நிக்காம உள்ள போய் கொஞ்ச நேரம் உக்காரு! 
நான் வந்ததுல இருந்து ஒரு இடத்துல நிக்காம ஓடிட்டே இருக்க. 


சரி இருயா! இரு வரேன்!


எனச்சொல்லி உள்ளே சென்ற அப்பத்தா கையோடு ஒரு தலையணையும் விரிக்க ஒரு பழுப்பேறியே சமுக்காளமும் கொண்டு வந்தாள். 


வருசம் முழுக்க ஒத்தயா உக்காந்தே தானேயா இருக்கேன்!
நீ இப்பத் தான் வந்துருக்க என் சீமராசா!


என என் மோவாயை நீவி, எச்சில் பன்னீராய் தெறிக்க  உச்சி மோந்த அப்பத்தாளை கையை பிடித்து கட்டிலில் உட்கார வைத்தேன். அப்பத்தா முந்தானையை ஒரு உதறு உதறி சுற்றி, ஒட்டிப் போன வயிற்றில் சுருங்கிப்போன அவள் இடையின் பின் கொண்டு சொருகினாள். அப்பத்தாளை உற்று நோக்கினேன். ஒடிசலான தேகம் மேலும் இளைத்துத்துப் போயிருந்தாள். அப்பத்தாளின் முகச் சுருக்கம் இன்னும் கூடிப்போய் இருந்தது. 


ஏன் அப்பத்தா இங்க ஒரு மாமரம் இருந்துச்சில்ல! ஆமாப்பா! இருந்திச்சு. அத வெட்டிபுட்டு தானே உங்கொப்பனும் பெரியப்பனும் இந்த வீட்ட கட்டினாவ!


எனச் சொல்லிவிட்டு சுருக்கம் விழுந்த அவள் முகத்தை தன் முந்தானையால் துடைப்பது போல தன் சோகத்தை மறைக்க முயன்றாள். பேச்சை மாற்ற எண்ணிய நான்,   


அப்பத்தா முத்துவீர் இப்ப எங்க இருக்கான்? என்ன பண்றான்?

அவன்தான் செத்துடானே! தெரியாதா?

என்ன அப்பத்தா சொல்ற? எப்ப? எப்படி செத்தான்?

ஆக்சிடென்ட்ல! அவனுக்கு ஆயுசு அம்புட்டுதான் என்ன செய்ய!
சரி அதவிடு உம்பொண்டாட்டி எப்புடி? சந்தோசமா வச்சுக்கப்பா! 

அழகுபெத்த புள்ளயா அவ! உங்கொப்பன் என்ன சொன்னான்?


எனக்கென்ன அப்பத்தா சந்தோசமா இருக்கேன்! அப்பா நல்லா இருக்காங்க!


அப்பாதான் ஏர்போர்ட்க்கு வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க!


அவுக வீட்ல அவுக அம்மா அப்பாவ நல்லா பாத்துக்னும்யா கட்டினதோட அப்டியே அத்துவிட்டுட கூடாது.


சரி அப்பத்தா!


எங்க காலத்துலலாம் காதல்னு சொன்னாலே வெட்டி போட்டுடுவாக! அதுக்காகவே மனசுக்குள்ளயே போட்டு முழுங்கிடுவோம்! இப்பயும் எங்க திருந்திருக்காணுக! படிச்சு பெரிய உத்தியோகம் போனாலும் கூடவே இந்த சனியனும் இழுத்துகிட்டு தானே வருது!இல்ல அப்பத்தா இப்போலாம் அப்படி இல்ல காலம் மாறிடுச்சு! 


போடா! பொசகெட்ட பயலே எவன் சொன்னான்? இந்தா முத்துவீரு ஆக்சிடெண்ட்ல செத்த்தான்னு சொன்னேனே! அது என்ன ஆக்சிடென்ட்டா? ஆக்சிடென்ட் மாதிரி தானே செஞ்சாக!


எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஒரு நிமிடம் அனைத்தும் அப்படியே நின்றது. என்னுடம் விளையாடித் திரிந்த முத்துவீர் கொல்லப்பட்டான் என்பதை ஏற்க மனம் வரவில்லை. அழகாய் சிரிப்பான். அந்த சிரித்தமுகம் என் கண்முன்னே வந்தது சட்டென்று அவன் முகத்தில் சிவப்பாய் ரத்தம் வடிய அவன் கண்கள் மேலே சொருகி முகமெல்லாம் ரத்தம். சட்டென அப்பத்தா என்னை தட்டி,


என்ன முத்துவீர நினைச்சியாக்கும். அதெல்லாம் ஏதும் இங்க மாறல. உங்கொப்பன் ஏதோ ஒத்துகிட்டான் அவனும் வெளியூருல இருக்கான் நீயும் வெளிநாட்டுல இருக்கன்னு கல்யாணம் செஞ்சுவச்சான். அதே இங்கிட்டு இருந்தான்னா இந்த ஊரு பயக கொன்னு போட்ருப்பானுங்க.


ரி அதெல்லாம் நீ ஏதும் போட்டு குழப்பிக்காத. நீ உம்பொண்டாட்டிய பத்தி சொல்லு எங்க பாத்த? எப்படி பழக்கமெல்லாம்? கல்யாணத்துல உன்கூட உக்காந்து நாலு வார்த்த கூட பேசமுடியல! அதுக்கு பொறவு புள்ள பொறந்துதான் பாக்க கொடுத்துவச்சிருக்கேன். ஹம்ம்..


என பெருமூச்சு விட்டவளாய் என்னை ஒரு பார்வை பார்த்தாள்.


அவள நான் படிக்கிற இடத்துல தான் பாத்தேன் அங்க தான் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு!


என நான் சொல்லி முடிக்கும் முன்பே அப்பத்தா!


இதுக்குதான் எங்க அய்யா என்னய பள்ளிக்கூடமே அனுப்பல...
பொண்ணுக மனச அப்புடி கட்டிப்போட்டுட முடியுமா? அந்த அந்த வயசுல வர்றது பொன்னுவளுக்கு வந்துதானே தீரும் 


என்றாள் நக்கல் கலந்த சிரிப்பாக!


என்ன அப்பத்தா அப்போ நீயும் தாத்தாவும் விரும்பித்தான் கட்டிக்கிட்டிங்களா?


எங்க? அதுக்கெல்லாம் எங்க காலத்துல இடமே இல்ல. வெசத்த கரைச்சு கொன்னுடுவாக! இப்ப தானே அவுகவுக  கேவுரவத்த காப்பத்துறேன்னு நடுரோட்ல வெட்டி போடுறது எல்லாம். உங்கொப்பன் படிக்கிற காலத்தில கூட இப்புடி இல்லையேப்பா! 


பின்ன எதுக்கு சிரிச்சியாம்? சொல்லு அப்பத்தா? நீ வேற யாரையும் விரும்புனியா?


சட்றென்று பார்த்தாளே ஒரு பார்வை. கோபமும் ஆச்சரியமும் கலந்து, பிறகு சற்று நிதானித்து என்னை பார்த்து!


அட போடா போக்கெத்தபயலே! எப்ப வந்து என்ன கேக்குறான் பாரு

என சிரித்துக்கொண்டே எழ முயன்றாள். நான் விடாமல் பிடித்து உட்காரவைத்து 

அப்பத்தா இப்போ நீ சொல்லலைனா அவ வந்த உடனே நான் கிளம்பிடுவேன். ரெண்டு நாள் இங்க இருக்க வந்தேன், ரெண்டே நிமிசத்துல கிளம்பிடுவேன்

என அவள் காதல் கதை கேட்க ஆவலாய் பொய் கோபத்துடன் கேட்க அப்பத்தா சட்டென கலங்கிப்போனாள். 

யய்யா! அப்படி மட்டும் சொல்லாதயா! உங்கொப்பனோ பெரியப்பனோ என்ன வந்து பாக்குறது இல்ல. இருக்கேனா செத்தேனான்னு கூட கேக்க ஆள் இல்ல. நானா இருக்குறத பொங்கிபோட்டு சாப்பிட்டு இருக்கேன். நீ வந்து ரெண்டு நாள் இருக்கன்னு சொன்னது மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு. என் பேர பேத்திய அவுக புள்ளையோட ரெண்டு நாள் இருக்குற பாக்கியத்த பரிச்சுபுடாதயா 


என அப்பத்தா சொன்னதும் என் உடம்பு அதிர்ந்து அடங்கியது.


இல்ல அப்பத்தா நான் போகல சும்மா சொன்னேன். இங்கதான் இருப்பேன் 


என அவளை கட்டிக்கொள்ள அவளது உடம்பு நடுங்கிய நடுக்கம் என் உடம்பில் அதிர்வை ஏற்படுத்தியது      


உனக்கு என்ன என்கதை தானே அதுக்கு என்ன ராசா சொல்றேன் கேளு!


என கதை சொல்ல உற்சாகமாய் முகத்தை துடைத்துக்கொண்டு தயாரானாள் என் அப்பத்தா. சட்டென அந்த வயதிலும் அவள் முகம் மலர்ந்து மங்கிப்போன கண்கள் பளீரென ஒளி அடித்தது.


அவுக நம்ம அய்யாவோட நிலத்துக்கு வேலைக்கு வருவாக! அவுகள நான் பாத்தது அங்க தான். 
ஒருநா! அய்யா வீட்ல இருக்கும்போது பின்வாசல்ல சாப்பாடு வாங்க வந்தவகள எங்க அய்யா கூப்பிட்டு என்னமோ பேசிக்கிட்டு இருந்தாக. அப்போ தான் அவுகள நான் பக்கத்துலையே பாத்தேன்.


அவுக சும்மா ராசா மாதிரி இருப்பாக. உழைச்சு உழைச்சு உடம்பு இரும்பு கணக்கா இருக்கும். தலையில துண்ட கட்டிக்கிட்டு வேட்டிய மடிச்சு ஏர் கலப்பைய புடிச்சு அவுக உழுவுரத பாக்கவே தவம் கிடைக்கணும்.


சொல்லச் சொல்ல அப்பத்தாளின் குரலில் வயது குறைந்துகொண்டே வந்தது. 


சரி சரி உன் ஆள வர்ணிச்சது போதும் நீ மேல சொல்லு!


என சொன்னதும் சற்று அசந்தவளாய்!


உனக்கு என்னையா வந்துச்சு? அவுகள இப்ப பாத்தாலும் அப்படியே தான் இருக்காக முறுக்கு குறையாம.       


என்ன சொல்ற அப்பத்தா இங்கதான் இருக்காங்களா? 
சரி அப்புறம் என்னாச்சு சொல்லு?


எனக்கு மனசுல ஆச வந்துடுச்சு அவுகள அங்க நின்னு இங்க நின்னுனு பாத்துகிட்டே இருப்பேன். அவுக பக்கத்துல கூட வரமாட்டாக! ஒரு நாள் நானே நேரா போய்... 
இந்தாயா எனக்கு உன்ன புடிச்சுருக்கு!  உனக்கும் என்ன புடிச்சிருக்குன்னு தெரியும். பின்ன ஏன் ஓடி ஒளியிர?


அப்படின்னு கேட்டுபுட்டேன்!


அதுக்கு அவுக இங்கபாருங்கம்மா!
அய்யாவுக்கு தெரிஞ்சா கொன்னு போட்டிடுவாக...
பேசாம போயிடுங்கன்னு சொல்ல,


விட்டேன் ஒன்னு கன்னத்துல. 

எனக்கு தூக்கிவாரிப்போட்டது அப்பத்தா பயங்கரமான ஆளாகத்தான் இருக்கும் போல என நினைத்து கதை கேட்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என எனக்குள் சொல்லிக்கொண்டு மேலே கதையை கேட்கத்துவங்கினேன்.

விட்ட அறையில அவுக பதிலுக்கு எனக்கு ஒன்னு விட்டு! உன்ன கட்டிக்கிட்டு இந்த ஊரைவிட்டு ஓடிப்போய் வாழ விட்ருவானுகளா?


எங்க போனாலும் விடமாட்டனுங்க! மனச போட்டு குழப்பிக்காம போ! போய் உங்க அய்யா சொல்ற எவனையோ கட்டிக்கிட்டு உசுரோட வாழப்பாருன்னு சொல்லிட்டு திரும்பி பாக்காமா போயிட்டாக. 

நானும் உங்க தாத்தன கட்டிக்கிட்டு உங்க பெரியப்பனையும் உங்கப்பனையும் பெத்து வளத்து பேரம் பேத்தி எடுத்துட்டேன்.

ஆனா அவரு இன்னும் கல்யாணமே செஞ்சுக்கல.

என சோககத்தில் மூழ்கிய அப்பத்தாளை நான் சிறிது நேரம் பார்த்தேன். அவளது முதல் காதல் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. அவரைப்பற்றி அப்பத்தா பேசும் போதெல்லாம் அவள் கண்கள் அகல விரித்து சுருக்கி வெட்கப்பட்டு தன் முதல் காதலை நினைவுகூர்ந்தாள். காய்ந்து வறண்ட பூமியில் எங்கோ ஈரம் இன்னும் இருந்தது. 

ஏன் அப்பத்தா அவங்க கல்யாணம் கட்டிகல?

பொண்ணு எதுமே அமையலயாம் ! அவுக சொந்தத்துல
அவுக தங்கச்சிய கட்டிக்கொடுக்கவே ரொம்ப காலம் ஆச்சு! இப்ப தங்கச்சி புள்ளையவே தாம் புள்ளையா நினைச்சு வளர்த்து படிக்க வச்சாரு. இந்த ஊர விட்டு போக மாட்டேன்னு இப்பவும் இங்கயே இருக்காக. 


சட்டென்று யோசித்தவனாய் என் இரண்டு கைகளையும் கன்னத்தில் பாதுகாப்புக்கு வைத்துகொண்டு 


ஏன் ஆத்தா இப்ப ரெண்டு பேருமே யாருமே இல்லாம தனித்தனியா தானே வாழுறீங்க! அதுக்கு ரெண்டுபேரும் ஒன்ன வாழலாம்ல?

வந்ததே கோபம் அப்பத்தாளுக்கு என்னை முறைத்து பார்த்துவிட்டு என்னை திட்டுவதற்கு வாய் எடுத்தாள் அதற்குள் என் மனைவி வந்து என்னை காப்பற்றினாள். 


ஏண்டா! 
வாழ வேண்டிய வயசுல வாழவிடல! 
இப்ப இந்த வயசுல வாழ வைக்க வந்துட்டியா? 


இல்ல அப்பத்தா அங்க எல்லாம் இது சகஜம்!


அடே பேராண்டி!
அங்க வேணா இதெல்லாம் சகஜமா இருக்கலாம். இங்க இவனுங்க இருக்குற வரை எவனையும் சேர விடமாட்டானுங்க. 


லீவு கிடைக்கும் போது இந்த கிழவிய வந்து பாத்தியான்னு இரு. என்ன புரியுதா?


என்று கோபமும் வெறுப்பும் கலந்து அழுத்தமாக சொன்னாள் அப்பத்தா. அதன் பிறகு நான் அதைப்பற்றி அப்பத்தாளிடம் எதுவும் பேசவில்ல. 


மறுநாள் காலை குளிப்பதற்கு துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு முத்துவீர் என்னை அழைத்துசெல்லும் கிணற்றடிக்கு சென்றேன். கிணற்றில் தண்ணீர் இன்னும் ஆழத்திற்கு சென்றிருந்தது. சிறுவயதில் அதில் முத்திவீர் பல சாகங்கள் நிகழ்த்திக் காட்டுவான். நான் கையோடு கொண்டு சென்ற கப்பில் அள்ளி அள்ளி குளிப்பேன். இன்று அதில் மோட்டார் பொருத்தப்பட்டு இருந்தது. 


இப்படியாக மகிழ்ச்சியாக அப்பத்தாளின் அறையிலிருந்து என்னை காப்பாற்றிக்கொண்டு  இருந்துவிட்டு அப்பாவிடம் சென்று விடைபெற்று விடுமுறையை முடித்துக்கொண்டு ஊர் கிளம்பிவிட்டேன். அப்பத்தாளின் காதல், முத்துவீரின் மரணம் மனதிற்கு ஓடிகொண்டே இருந்தது. அதுவும் அப்பத்தாளின் அந்த பசுமை மாறா காதல் அழகு.


வந்து சில மாதங்களுக்கு பிறகு எப்பொழுதும் போல அப்பாவிற்கு அழைத்து பேச எண்ணி தொடர்புகொண்டேன்.


அப்பா! நான்தான் பேசுறேன்! நல்லா இருக்கீங்களா?

நல்லா இருக்கேன் தம்பி! வீட்ல பசங்க என்ன பண்றாங்க?

எல்லாரும் நால்லா இருக்காங்கப்பா! அங்க வீட்ல அம்மா, தங்கச்சி  எல்லாரும் எப்படிப்பா இருக்காங்க? அப்பத்தா கிட்ட பேசினீங்களா!

அட அத ஏன்பா கேக்குற? கிழவிக்கு புத்தி கெட்டுபோச்சு!?

ஏன் என்னப்பா ஆச்சு? 
     
காலம் போன கடைசியில் கிழவி அந்த கீழத்தெரு ராமையாவ போன வாரம் வீட்டுக்கு கூட்டி வந்து இனிமே நாங்க சேர்ந்து வாழப்போறோம்னு நிக்கிது?

தூக்கிவாரிப் போட்டுடிடுச்சு எனக்கு. என்னமா இந்த வயசில போயி இப்படி சொல்றன்னு கேட்டதுக்கு 

ஆமாடா! ஆசபட்டப்ப வாழ விடல, இப்ப எல்லாரும் என்ன தனியா விட்டு வந்துடிங்க. எனக்கு துணைக்கு ஒரு ஆள் வேணாமா? ன்னு கேட்டுச்சு 

ஆத்தா சொல்றதும் நியாயம் தானே! சரின்னு சொல்லிட்டேன்.

எனக்கு ஒருபக்கம் ஆச்சர்யமாகவும் பயமாகவும் இருந்தது. அப்பத்தாவின் தொலைபேசி எண்ணை தேடி எடுத்து பேச அழைத்தேன்.

அப்பத்தா! நான் தான் பேசுறேன்!சொல்லுயா ராசா நல்லா இருக்கியா? 


என்ன அப்பத்தா இப்படி பண்ணிடீங்க?


என்ன பண்ணேன்! நீ சொன்னது என் மனசுலேயே தங்கிடுச்சு! ஆமா, என்ன தப்பு? நான் பெத்தது ரெண்டும் அவனவன் இங்க பத்து நாள் அங்க பத்து நாள்ன்னு அலைய்விட்டானுங்க. கடைசில இங்க கொண்டு வந்து ஒத்தையில விட்டுட்டு போயிட்டானுங்க. 


நீ சொன்னது தான் ராசா சரி இவனுகள பத்தி இனி நான் ஏன் கவலைபடனும். அதான் நேரா போனேன் அவுககிட்ட பேசினேன். பேசினதுமே ஒரே அழுக. இத்தன நாளா எனக்காகத்தான் அவுக கல்யாணமே செஞ்சுக்காம இருந்திருக்காக. சரின்னு முடிவு பண்ணி ரெண்டு பெரும் ஊரு மத்தியில இருக்குற கோயிலுக்கு போய் அவுக என் கழுத்தில மாலய போட்டு கூட்டிட்டு வந்துடாக. ஊருக்காரவுக எல்லாம் கூடி ஒரே கலாட்டா! அவுக ஆளுக நம்ம ஆளுகன்னு கூடி சண்டைக்கு வந்தாக. இந்தா பாருங்க இனிமேயும் உங்க சாதி எங்கள ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லி விடு விடுன்னு நேரா வீட்டுக்கு வந்துட்டோம். பொறவு உங்கொப்பன் வந்து தான் எல்லாத்தையும் சரிகட்டுனான்.

மறுமுனையில் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருந்தேன்.

எனக்கு பேச எதுவுமே இல்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் நான்


சரி அப்பத்தா இனி என்ன செய்யாலாம்னு இருக்க?

ஆங், நாள மருநா ஏலகிரி போறோம். தேன்நிலவுக்கு!

என்று கிண்டலாய் கூறிவிட்டு என் அழைப்பை துண்டித்தாள் அப்பத்தா.     


அ. மு. நெருடா