தொடரும் தோழர்கள்

Thursday, March 8, 2018

The Color Purple


உலகில் ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட, உலகின் சிறந்த விருதுகளில் ஒன்றான புலிட்சர் விருது பெற்ற நாவல் என்கிற கூடுதல் சிறப்புடையது The Color Purple. கறுப்பின பெண்களின் நிலையை ஆண்களின் ஆத்திக்கத்தை மெல்லிய உணர்சிகளில் புதைத்து அழகாகவும், ஆழமாகவும் சிந்திக்க வைக்கும் இந்நாவல்.

பதினான்கு வயது சிறுமி கடவுளுக்கு எழுதும் கடிதத்தோடு துவங்குகிறது கதை. தந்தையால் கருவுற்று இரண்டு குழந்தைகளை ஈன்று அவற்றை தன் தந்தையே வேறொருவருக்கு விற்றபிறகு  கடவுளக்கு கடிதம் எழுதுகிறாள். அவளை சுற்றி என்ன நிகழ்கிறது? தந்தை தன்னை என்ன செய்கிறார் என ஏதும் அறியாதவளாய்.

தாய் நலிவுற்ற பிறகு அவளது பொறுப்புகளை தூக்கிச் சுமந்தவாறு ஒரு சிறுமி பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டு அடுப்படியில் தள்ளப்படுகிறாள். ஆண்களின் சமூதாயம் பெண்கள் மீது அப்படி என்ன தீராத வஞ்சம் என்று தெரியவில்லை. கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் அவர்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார்கள். தாய் இறந்தபின் தனக்கு ஒரே ஆதரவான  தன் தங்கையிடம் அப்பாவின் வக்கிரம் நிறைந்த கை நீளுகிறது. தடுக்க இயலாதவளாய் தடுமாறுகிறாள். அப்பாவிடமிருந்து மற்றொரு ஆணின் பிடியில் தள்ளப்படிகிறாள். சிறை மாறுகிறதே ஒழிய வேறு எந்த மாற்றமும் இல்லை.

தந்தையிடம் தனித்து விடப்பட்ட தங்கையை பிரிந்து வேறொரு ஆணின் சிறைக்கு வந்தவள், அங்கு அவன் மற்றும் அவனது குழந்தைகளை கவனித்துக்கொள்ள விடப்படுகிறாள். தந்தையிடமிருந்து தப்பித்து வந்த தன் தங்கை அவளோடு சேர்ந்து வசிக்க அனுமதிக்கப்படுகிறாள். ஒரு வேளை தாங்கள் மீண்டும் பிரிக்கப்பட்டால் தான் எங்கிருந்தாலும் கடிதம் எழுதுவதாக தங்கை தெரிவிக்க, தங்கையிடமே படிக்க கற்றுக்கொள்கிறாள்.  இவனது இச்சைக்கு இணக்க மறுத்ததால் அங்கிருந்தும் தங்கை விரட்டப்படுகிறாள். வாழ்கையில் தனக்கென இருந்த ஒரே மகிழ்ச்சியும் அவளை விட்டு நிரந்தரமாக பிரவதை அவளால் தடுக்கமுடியவில்லை. தங்கையின் கடிதத்திற்கு ஏங்கிக்கிடக்கும் அவளுக்கு தபால் பெட்டியை தொடும் உரிமையும் மறுக்கப்படுகிறது.  பதினான்கு வயதில் தன் சிரிப்பை மறந்தவள் அந்த ஊருக்கு வரும் ஒரு பெண் பாடகியின் மூலம் தொலைந்த தன் சிரிப்பை தேடி கண்டுகொள்ள முற்படுகிறாள். அவளும் பிரிகிறாள். காலங்கள் ஓடுகின்றன தொலைந்த தன் சிரிப்பு அவளுக்கு மறந்தே போய்விட்டது!

சில ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பிய அந்தப் பாடகியின் துணையால் தங்கையின் கடிதம் முதல்முறையாக அவளது கைகளில் கிடைக்கிறது. இத்தனை ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? தான் ஆதரவற்ற நிலையில் சொல்லி அழ துணையில்லாமல் துவண்ட அவளுக்கு அந்த ஒரு கடிதம் கண்ணீர்ரை வரவழைத்தது. கூடுதலாக சிறுவயதில் தந்தை தன்னிடம் இருந்த பிரித்த தன் இரு குழந்தைகளும் தங்கயிடமே வளர்ந்து வருவதும் தெரியவருகிறது. இத்தனை ஆண்டுகளாக தன் தங்கை எழுதிய கடிதங்களை அவன் மறைத்து வைத்திருக்கும் பெட்டியை தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொன்றாக தேதிவாரியாக தினமும் படிக்கத் துவங்குகிறாள். அவளது தங்கை  ஆப்ரிக்காவில் வசிப்பது, அங்கு அவளது சந்தோசமான வாழ்கை பற்றி அங்கு வரும் மேற்குலகத்தவர் வற்றி பல குறிப்புகளை அவள் வாசிக்கிறாள்.

அடக்கிவைத்திருந்த கோபம் ஒருநாள் வெடித்துகிளம்பி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தன்னை விட்டு அவளால் தனித்து வாழ முடியாது என்று நம்பிக்கொண்டிருக்கும் பல ஆண்களைப்போல் அவனும் எண்ணுகிறான். வீட்டை விட்டு வெளியேறி அவள் வேறுபகுதிக்கு சென்று நல்ல முறையில் வாழ்கையை தொடர்கிறாள். ஊரில் தன்னை சீரழித்த தந்தை மறைந்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கிறாள் தன் தாய்வழி சொத்துகள் அவளுக்கு கிடைகின்றன. அதைக் கொண்டு அங்கேயே அவள் வணிகத்தில் ஈடுபட்டு, தன்னை விட்டுப் பிரிந்தால் நடுத்தெருவில் தான் வாழ்கை என்று கூறியவனின் கண்முன்னாலேயே மிகச் சிறந்த வாழ்கையை, அவள் கண்டடைந்த சுதந்திரத்தை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஒருநாள் மாலைப்பொழுதில் அவள் தன் தோழிகளோடு தன் வீட்டு முற்றத்தில் உரையாடிக்கொண்டு இருந்த அவளது பண்ணைக்குள் ஒரு சீருந்து நுழைகிறது! வந்தவர்கள் தான் தொலைத்த குடும்ப உறவுகள். சிறுவயதில் பிரிந்த தன்னுடைய தங்கை! என்று இந்நாவல் நிறைவுறுகிறது.



பெண்கள் வேண்டுவது சிறப்பு சலுகைகளை அல்ல. சகமனுஷியாக தன் உரிமைகளை மட்டுமே. தன் வசதிக்காக அதை கெட்டியாய் பிடித்திருக்கும் இந்த ஆண் சமூகம் எந்த நாளும் விட்டுத் தரமாட்டார்கள். அவர்களிடமிருந்து பெண்களே தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். தன் உரிமைக்கு தான் போராடனுமேயன்றி வேறொவர் வந்து போராடமாட்டார். அடுப்படிக்குள், வீட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்ணினம், அதை விட்டு வெளியேறி உலகை சென்றடைய வேண்டும். ஆண்களுக்காக தங்களை தயார்படுத்தும் சாதனமாகவே பார்க்கும் இந்த முதலாளித்துவ ஆணாதிக்க போக்கை அறிந்து அவற்றை விட்டு தூர நிற்கவேண்டும்.

ஆண் சமூகங்களில் பெண்களுக்கான சிறை உலகின் அனைத்து பகுதிகளிலும்   ஒன்றே! கரிபடிந்த, அழுக்குற்ற அவர்களது மனங்களைப் போலவே அந்த சிறையும் இருக்கிறது. அந்தச் சிறையில் அவர்களுக்கு எந்த உரிமையும் மறுக்கப்பட்டது.  இதைதான் கவிஞர் கந்தர்வன் வருத்தத்தோடு தன் கவிதையில் பதிவு செய்தார்.

“நாளும் கிழமையும் நலிந்தோர்கில்லை
ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை”

ஆண்களின் சமூகம் சூழ்ச்சியானது தனது தாழ்வுமனப்பான்மை காரணமாக தன்னை மேலானவனாக காட்டிக்கொள்ள பெண்களை அடக்கி அவர்களது உரிமையை முடக்கி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துகொள்கிறான். பெண்களும் தாங்கள் அடிமைகளாக இருப்பதை உணராமல் அது தனது உரிமையென அவர்களே நம்பும்படி செய்துவிட்டனர். இதில் தான் ஆணாதிக்கத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது.    

இந்த நிலை மாறும்.  நிச்சயம் அது எம்காலத்திலேயே நடக்கும்.

நன்றி
அ. மு. நெருடா      

No comments:

Post a Comment