தொடரும் தோழர்கள்

Sunday, February 18, 2018

பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்

நூல்: பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்
ஆசிரியர்: இ.பா. சிந்தன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மொத்த பக்கங்கள்: 191

அரசியல் பேசும் சினிமா எனும் புத்தகத்தின் மூலம் அறிமுகமாகிய எழுத்தாளர் இ. பா. சிந்தனின் அடுத்த படைப்பு பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும். போராட்டக்களத்தில் கலையின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஆணித்தரமாக எடுத்து வைக்கும் இந்த நூல் கலையின் வடிவில் போராட்ட வரலாற்றை முன்வைக்கிறது. பாலஸ்தீனத்தின் வரலாறு அதன் திரைப்படங்களில் அழுது தீர்த்திருக்கிறது. ஐ.நா சபையால் ஒரு நாடாக இதுவரை அங்கீகரிக்கப்படாத பாலஸ்தீனம் உலக சினிமா அரங்கில் திரைப்படங்களின் ஊடாக வலிமிகுந்த தன் வரலாற்றை எடுத்து வைக்கிறது.  

இந்திய சினிமாக்கள் முன் எப்போதையும் விட முன்னேறியிருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் சமகால அரசியலை, சமூக அவலங்களை, மக்கள் போராட்டங்களை, சொல்வதில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. எளிய மக்களின் வாழ்வை, திரை போட்டு மறைக்கும் அமெரிக்கத் திரைப்படங்களைப் பின்பற்றியே நம் இந்தியத் திரைப்படங்களும் எளிய மக்களின் வாழ்க்கையை படமாக்குவதில் தயக்கம் காட்டிவருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இயக்குனர்கள் சிறந்த படங்களை எடுத்தாலும் வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறுவதில் சிக்கல் நீடித்திருக்கிறது.

147 பாலஸ்தீன திரைப்படங்களைக் கொண்டு அதன் வரலாற்றை எளிமையாக நமக்கு தந்துள்ளார் எழுத்தாளர் இ. பா. சிந்தன். பெரும் நிலப்பரப்பை ஆதியில் கொண்டிருந்த ஒரு நாடு இன்று சுருங்கிச் சுருங்கி ஒரு சிறிய தேசமாக மாற்றப்பட்டிருகிறது. வரலாற்றை அடிப்படையாகக் கொண்டிராத, ஒரு மத நூலைப் உண்மை வாரலாராக மாற்ற முற்படும் யூத இஸ்ரேலிய அரசிற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கேயே பிறந்து வாழ்ந்து வரும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் அதில் உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் ஒருபக்கமாக சேர்ந்து பாலஸ்தீனத்தை நசுக்கி அழிக்க நினைப்பதை பாலஸ்தீனியர்கள், தங்கள் திரைப்படங்களில் உலகிற்கு எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர் . இதனாலேயே பல கலைஞர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.

உலக ஊடகங்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பாலஸ்தீனிய விடுதலை வரலாற்றை திரைப்படங்களின் துணைகொண்டு சிறப்பாக எழுதியிருக்கும் எழுத்தாளர் இ. பா. சிந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள். 

நன்றி.
அ. மு. நெருடா.

No comments:

Post a Comment