ஆசிரியர்: சித்திரக் கலைஞர் மதன்
வெளியீடு: ஆனந்தவிகடன்
ஆனந்தவிகடனில்
மதனின் "ஹாய் மதன்" கேள்வி பதில் பகுதியை சிறுவயதில் படித்திருக்கிறேன்!
நக்கலாக நகைச்சுவையுடன் இருக்கும் அவரது எழுத்துநடை. வாசிப்பு போட்டி என்று
அறிவித்ததும் தானாய் வந்து சேர்ந்த முதல் புத்தகம் “வந்தார்கள் வென்றார்கள்” யார்
வந்தது? யார் வென்றது? வென்ற பின் தங்கியது? தங்கிய பின் நிலைத்தது? என என் கேள்விகள்
நீண்டுகொண்டே சென்றது. சரி இந்த புத்தகத்தையே முதலாவதாக தொடங்கலாம் என நேற்று
நள்ளிரவு (14/02/18 12:15 AM) தொடங்கி இன்று மதியம் (14/02/18 03:15 AM) படித்து முடித்தேன்.
முடித்தபின்
சற்றுநேரம் வெளியில் சென்று வெய்யிலில் நின்றேன். தொலைவில் 10,000 வீரர்களைக்
கொண்ட குதிரைப்படை புழுதிபறக்க என்னை நோக்கி வருவது தெரிகிறது . என் அலுவலக
வாசலில் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த எனது கருத்த அரேபியக் குதிரை
முன்னங்கால்களை தூக்கி கனைத்துக்கொண்டு வந்து நிற்க திரைப்படங்களில் வருவது போல
எனது இக்கால உடை பழங்கால போர்வீரனின் உடையாக மாறுகிறது (கிராபிக்ஸ் உபயம்).
உடைவாளை ஏந்தித் புரவிமீது ஏறி எதிரிப்படையில் நுழைந்து சுழன்று சுழன்று வாள்வீசி
அனைவரையும் வெட்டிவீழ்த்தி வெற்றியோடு திரும்பவும் அலுவலகம் வந்து எனது பழைய
நிலைக்கு திரும்பி கணினியில் தட்டத்துவங்குகிறேன்.
படிக்கும்
பொழுது இந்த உணர்வு இயற்கையாய் என்னை வந்து சேர்க்கிறது. சற்று நிதானித்துப்
பார்த்தால் தான் எத்தனை கொலை, கொள்ளை, துரோகம், சதித்திட்டம், கடத்தல்,
கற்பழிப்பு, கலவரம் பயங்கரம். கொலையுடன் கலையும், துரோகத்துடன் நட்பும்,
காமத்துடன் காதலும், அனைத்தும் கலந்துகட்டி வாழ்ந்திருக்கிறார்கள். இக்காலத்தைப்
போலவே அக்காலத்திலும் கிறுக்கு அரசர்களுக்கு பஞ்சமே இல்லை. உதாரணத்திற்கு ஒரு
அரசர் (பெயரை சொல்லமாட்டேனே) தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு நிர்வாக
வசதிக்காக மாற்ற முடிவெடுக்கிறார்.
அத்தோடு விட்டால் பரவாயில்ல. தில்லி மக்கள் அனைவரும் சேர்ந்து குடிபெயர வேண்டும்
என்று ஆணையிடுகிறார். கிட்டத்தட்ட 700 மைல் மக்கள் 40 நாட்கள் நடந்தே சென்று
சேர்ந்திருக்கிறார்கள். பிறகு தன் முடிவு தவறு என்று உணர்ந்து திரும்பவும் பல
லட்சம் மக்களை தில்லி திரும்ப உத்தரவு இட்டுருக்கிறார் மன்னர். கத்திமுனையில்
மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் செல்லும் வழியிலேயே பாதி மக்கள் உயிரை
விட்டிருக்கிறார்கள்.
எதையும்
ஒதுக்கித்தள்ளிவிட முடியாத குறிப்புகள்.
தில்லி
சுல்தான்களின் வரலாறு அனைத்தையும் தேதி குறிப்பிட்டு ஆதாரத்துடன்
விளக்கியிருக்கிறார் மதன்.
புத்தகம் மூடி மேசையில் வைத்தேன்
ரத்த வாடை – அ. மு. நெருடா
No comments:
Post a Comment