தொடரும் தோழர்கள்

Friday, January 19, 2018

கூடை நிறைய சுண்டல்!

அம்மா! எங்க மா அந்த கூடைப் பை? நேரம் ஆச்சுமா! அப்பா வந்துடப் போறாங்க! அதுக்குள்ள போய்டணும். அப்பா வந்துட்டா விடமாட்டாங்க மா! ஏன் பறக்குற? அங்க தான் அடுப்படில இருந்துச்சு போய் பாரு. இந்த ராத்திரியில அவசியம் இப்படி போகனுமா? சொல்லிக்கொண்டே காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள் அம்மா. நீ கேட்டனு தான் வெண்டைக்காய் சாம்பார், உருளை கிழங்கு வறுவல் செய்யப் போறேன். நீ இந்த சுண்டலுக்காக ஓடுற. சீக்கிரமா திரும்பி வந்துடனும். அப்பா வர்றதுக்குள்ள வந்துடு, அப்புறம் அடி வாங்கனும்.

அம்மா அப்படித்தான் அவனை விளையாட்டுக்கு மிரட்டுவாள். அடிவிழும் சமயம் எப்படியாவது வந்து விழுந்து தடுத்து விடுவாள். அது அருணுக்கும்  தெரியும். இருந்தாலும் உள்ளூர ஒரு பயம் எப்போதும் இருக்கும்.

வெளியிலிருந்து கார்த்தி கத்திக் கொண்டே இருந்தான். நேரம் ஆச்சுடா சீக்கிரம் வா. எல்லாரும் போகப் போறாங்க”. கார்த்தி மேல் வீட்டு பையன். இவனை விட வயதில் சிறியவன் தான் அனாலும் இவனை வாடா போடா தான். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். காலையிலும் மாலையிலும் அவனது அப்பா தான் அவனை வண்டியில் கொண்டு போய் விடுவார்.   கார்த்தி அவன் அப்பாவோடு வண்டியின் முன் நின்றுகொண்டு ஏதோ அவனே வண்டியை ஓட்டுவது போல பாவனை செய்வான். எப்பொழுதும் தெத்துப்பல் தெரிய அழகாய் சிரிப்பான்.
இதோ இருக்கு மா! அடுப்படியில் அடுப்பின் மூலையில் ஆணியில் மாட்டியிருந்த கூடைப் பையை எடுக்க அடுப்படி மேல் ஏறி மேடை மேல் இருந்த புளித் தண்ணீரை கொட்டி விட்டான் அருண். பாத்திரம் விழுந்த சப்தம் கேட்டு அம்மா ஓடிவந்து அருணை தூக்கிக் கொண்டாள். விடு மா நேரம் ஆச்சு என்று துள்ளிக் குதித்து இன்னொரு பிளாஸ்டிக் பையை கூடைப் பையினுள் திணித்து, அடுப்பறை வழியாக பால்கனியில் ஏறிக் குதித்து கார்த்தியுடன் சேர்ந்து வேகமாக திடல் நோக்கி இருவருமாக ஓடினர்.

ஆண் பெண் பாலின பேதமின்றி சுமார் நாற்பது சிறுவர் சிறுமியர் அவரவர் வீட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பையை கொண்டு வந்திருந்தனர். அக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுந்தர் அண்ணா தான் மூத்தவர். அவர் அனைவரையும் அழைத்து இரண்டு இரண்டு பேராக அணிபிரித்துக் கொண்டிருந்தார். அருண் தன்னை யாருடன் சேர்த்து விடப் போகிறார் என்று நினைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான்.
சுந்தர் அண்ணா! அந்தக் குடியிருப்பில் பெரிய மாணவர்களில் அவர் தான் இவர்களுடன் விளையாட வருவார். மற்ற பெரிய அண்ணன்கள் விளையாட வர மாட்டார்கள். அவர்கள் தனியே 5,6 பேர் தனித் தனி குழுவாக பிரிந்து கூடிப் பேசுவர். எங்கள் குழுவில் சுந்தர் அண்ணா!, சாம்பு, ரமேஷ் மூவர் மட்டும் தான் முழுக் கால்சட்டை அணிவர். சுந்தர் அண்ணா வீட்டில் தான் தொலைகாட்சி பெட்டி இருக்கும். அங்கு தான் சிறுவர்கள் குழுமி இருப்பர். சுந்தர் அண்ணாவின் அப்பா எதுவும் சொல்ல மாட்டார். நன்கு பழகக் கூடியவர்.
சிறுவர்கள் எப்பவும் ஒரே குழுவாகத்தான் விளையாடுவர். அனைவரும் ஒரே விளையாட்டு தான் விளையாடுவர். சனி, ஞாயிரு வந்தால் வெயில் முழுதும் இவர்களின் தலை மீதே விழும். காலை தொடங்கி இரவு இருட்டும் வரை அனைவரும் ஒன்றாக வெளியில் விளையாடுவர். வேளைக்கு தகுந்த விளையாட்டை விளையாடுவர். காலையில் பம்பரம், நாடு பிடித்தல், மதியம் சாப்பாடு முடிந்து 7 கல், மாலை கிரிக்கெட். இருட்டியதும் ஒளிஞ்சான் புடிச்சான். இது காலத்திற்கு தகுந்தார் போல் மாறிக்கொண்டே இருக்கும்.
அருணுடன் சாந்தாராம் அணி சேர்த்து விடப்பட்டான். புரட்டாசி மாதம் வந்தாலே பெரும்பாலானோர் வீட்டில் கொலு வைத்து பஜனைகள் பாடி அல்லது கதைகளைக் கூறி வருபவர் அனைவருக்கும் ஒரு கை சுண்டல் கொடுத்து அனுப்பி வைப்பர். அப்படி வீடு வீடாக சென்று கூடைப் பையில் சுண்டல் சேகரித்து இரவு எட்டரை மணிக்குள் திரும்பவும் இதே இடத்தில் கூட வேண்டும். 
சாப்பாடு விசயத்தில் அருண் படு கெட்டி. எந்த வீட்டில் என்ன வகை சுண்டல்  கிடைக்கும் என்று அவனாகவே அறிந்து வைத்திருந்தான். சுந்தர் அண்ணா சொன்னதும் விடு விடு வென்று சாந்தாவை அழைத்துக் கொண்டு குடியிருப்பின் கடைசி வரிசைக்கு சென்றான். டேய்! அருண் ஏன் டா இப்போ இவ்ளோ வேக வேகமா கடைசிக்கு வந்த? எல்லாரும் முன் வரிசையில தான் இருக்காங்க. ஒவ்வொரு வீடா போகலாம் தானே! என்றான் சாந்தா. அதற்கு அருண் போகலாம் தான், அப்படிப் போனால் ஒரே சமயத்தில் நிறைய பேர் ஒரே வீட்டிற்கு போக வேண்டி வரும். சுண்டல் குறைவாகத் தான் கொடுப்பார்கள். இங்கு கடைசி வரிசைக்கு அவர்கள் வர இன்னும் நேரம் நிறையா இருக்கிறது. ஆகவே இங்கு இப்பொழுது நமக்கு நிறைய சுண்டல் கிடைக்கும் நம் வேலையும் சீக்கிரம் முடிந்து விடும்என்றான்.  
சரி என்று சொல்லி இருவரும் ஒவ்வொரு வீடாக சென்று அமர்ந்து கதை கேட்டு, பாட்டு பாடி சுண்டல் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கொலு வேறு வேறு வடிவில் இருந்தது. அகிலா அக்கா வீட்டில் 11 படி வைத்து வரிசையாக பொம்மைகளை அழகாக அடுக்கி வைத்திருந்தது பார்க்க பிரமாண்டமாக இருந்தது சாந்தாவிற்கு. பக்கத்திலேயே பூங்காவைப்போல், விவசாய நிலம் போல், குட்டி குட்டியாக மாடு, ஆடு என நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது கண்டு அருணிடம் சாந்தா கூறினான். ஆனால் அருணுக்கு,  4 வகையில் சுண்டலும் நிறைய தேங்காய்  சேர்த்து, இனிப்பு, காரம் என வகை வகையாக தயார்நிலையில் சுண்டல் இருப்பது மட்டும்தான் தெரிந்தது. கொலு பொம்மைகள் அருணை அவ்வளவாக ஈர்க்கவில்லை. சுண்டல் வாசனை மட்டுமே ஈர்த்தது. பொறுமையாக சுண்டலை பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டிற்கு இருவரும் சென்றனர்.
அடுத்து வித்யாவின் வீடு. வித்யா 3ஆம் வகுப்பு மாணவி. வித்யாவைக் காணும் போது எல்லாம் அவனுக்குள் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுவது என்ன என்று அறியும் வயது இல்லை. அனால் வித்யாவை காணும்போது எல்லாம் அவளது கவனத்தை ஈர்க்க ஏதாவது சேட்டைகள் செய்வது வித்யாவிற்கும் சிரிப்பை வரவழைக்கும்.  அருண் படிக்கும் அதே பள்ளி தான். அவள் அம்மா அப்பாவிற்கு அருணை நன்கு தெரியும். அருண், சாந்தா இருவரும்  உள்ளே சென்றனர். வித்யாவின் அப்பா வாப்பா அருண், என்று வரவேற்று உள்ளே அழைத்து அமர வைத்தார். வித்யா அவரது அப்பாவின் அருகில் அமர்ந்திருந்தாள். இன்னும் சிலர் வந்த்தும் அனைவரும் ஏதோ பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். அருண் மட்டும் சுண்டல் வாசம் வரும் வழியையே பார்த்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் அம்மா வந்து சுண்டல் தந்து வழி அனுப்பி வைத்தாள்.
ஒரு வழியாக இருவரும் தங்கள் பைகளை வெகு சீக்கிரத்திலேயே நிரப்பி சுந்தர் அண்ணா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் வர இருவரும் காத்திருந்தனர். அப்பொழுது அருகில் குழுமியிருந்த அண்ணன்மார்களை பார்த்து, சுந்தர் அண்ணாவிடம், நாமும் இப்படித்தான் பெரியவர்களானதும் தனித் தனி குழுவாக பிரிய வேண்டுமா? இப்படியே ஒன்றாகவே இருக்கக் கூடாதா? அனைவரும் ஒன்றாக இருந்தால் நான்றகத் தானே இருக்கும் என்று கேட்டான். அதற்கு சுந்தர் அண்ணா சிரித்துக்கொண்டே தாரளமாக நாம் இப்படியே இருக்கலாம் என்று அருணை ஆசுவாசப்படுத்தினார். ஆனால் பெரியவர் ஆனதும் நாம் இப்பொழு இருப்பது போலவே இருக்க இந்த சமூகம் அனுமதிப்பது இல்லை என்றார். அது ஏதும் அவனுக்கு புரியவில்லை. அருணுக்கு எப்பொழுது அந்த சுண்டலை பகிர்ந்து தருவார்கள் என்று மட்டும் தான் வருத்தம்.
அனைவரும் அவரவர் பங்களிப்பை அளித்து சுண்டலை சேகரித்தனர். ஒரு குழு சுண்டல் சேகரிப்பில் ஈடுபட்டது, மற்றொரு குழு அதனை வகை பிரித்து அதற்காக வைத்திருந்த பையில் கொண்டு சேர்த்தது. மற்றொரு குழு அரசமர இலைகளை சேகரித்து கொண்டு வந்தது. இன்னொரு குழு இலைகளை நார் கொண்டு பின்னி சாப்பிட எதுவாக தயார் செய்து கொடுத்தது. இன்னுமொரு குழு சேகரித்த சுண்டல்களை பாதுகாப்பதில் ஈடுபடுத்தப்பட்டது. குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர்.. அனைவர் சேகரித்த சுண்டல்களும் ஒரு  பெரிய பையில் சேர்த்து கொட்டி வைக்கப்பட்டது. அனைத்துக் குழுக்களும் வந்து சேர்ந்த பின் அனைத்தும் அனைவருக்கும் பகுந்து அளிக்கப்பட்டது.
பட்டாணி சுண்டல், காராமணி சுண்டல், வேர்க்கடலை சுண்டல், நவதானிய கார சுண்டல், மொச்சை சுண்டல், ராஜ்மா சுண்டல், பச்சைப்பயிறு சுண்டல் என பல விதமான சுண்டல்களும் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அருண் அவனுக்கு அளிக்கப்பட சுண்டலை ஆசையுடன் பார்த்து, நுகர்ந்து, ருசித்து உன்னத் துவங்கினான். அபொழுது சுந்தர் அண்ணா அருகில் குழுமியிருந்த அண்ணன்களுக்கும் சிறிது கொடுக்கலாம் என்று யோசனை கூறினார். அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு வேறொரு பையில் அவர்களுக்கு ஒரு கூடை நிறைய சுண்டல் கொண்டு போய் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்ட அந்த வளர்ந்த, படித்த அண்ணன்மார்கள் அதைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு செய்யத் துவங்கினர். அப்பொழுது சுந்தர் அண்ணா அருணை அருகில் அழைத்து அங்கே பார், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளாதவர்கள் இப்படித்தான் அடித்துக்கொண்டு அழிந்துபோவார்கள் என்றார்.

உயிர் வாழ்வதற்கான கூட்டுமுயற்சியின் காரணமாகத்தான் மனித இனம் தொடர்ந்து வாழ முடிந்தது’ - கார்ல் மார்க்ஸ்.

7 comments:

  1. மிகவும் தேர்ந்த முதிர்ந்த எழுத்தாளரின் கதைபோலத் தொடங்கியதற்கே முதலில் பாராட்டுகிறேன். முடிப்பதில் அவசரப்பட்டு ஏதோ பஞ்ச தந்திர (அ) ஈசாப் கதைபோல முடித்தது செயற்கையாகப் படுகிறது. (ஈசாப் இங்கே கார்ல் மார்க்சாக வந்திருக்கிறார்?) அல்லது முடிவில் கலைநயம் குறைந்து காணப் படுகிறது. என்றாலும் முதல் கதை என்று நம்ப முடியாத அளவிற்கு முற்பகுதி அசத்தலாக வந்திருக்கிறது! சுண்டல் விவரணைகள், பசங்களின் இயல்பான பேச்சு அனைத்தும் அச்சு அசலாக வந்து அசத்துகிறது.
    சிறுகதையும் கைப்பழக்கம்! தொடர்ந்து எழுத எழுத, சிறுகதை உலகம் அள்ளி அணைத்துக் கொள்ளும்! வாழ்த்துகள் (ஆங்காங்கே சிறு சிறு எழுத்துப் பிழைகள் நன்கு போலும் இலக்கணச் சொற்கள் வழக்கில் வருவது தவிர்க்க சிறுகதைகளை நிறையப் படிக்கவும்.
    ஒரு சின்னஞ்சிறு பட்டியல் –
    புதுமைப்பித்தன் - துன்பக் கேணி,
    ஜெயகாந்தன்-ஒருபிடிசோறு,
    எஸ்.ரா.- பாங்கிணறு,
    பிரபஞ்சன் - வனமல்லி,
    கந்தர்வன் – துண்டு,
    அம்பை -அம்மா ஒரு கொலைசெய்தாள்
    ச.தமிழ்ச்செல்வன் – அப்பா
    மேலாண்மை – கொலை போலும் கதைகளைப் படித்துவிட்டுத்தான் எழுதவேண்டும் என்பதில்லை, படித்துக்கொண்டே எழுதலாம், எழுதிக்கொண்டே படிக்கலாம். எழுதுவது முக்கியம். எழுது!
    எழுத்துக்குப் படிப்பு, துணைசெய்யவே அன்றி வினைசெய்துவிடலாகாது!
    வாழ்த்துகள்பா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அப்பா. இறுதிப் பகுதியில் அவசரப்பட்டு முடித்துவிட்டதை நானும் பின்னர் உணர்ந்தேன். இனி திருத்திக் கொள்கிறேன். பரிந்துரைப் பட்டியலுக்கு நன்றி. அவசியம் படித்து, கற்று தொடந்து எழுத முயற்சிக்கிறேன்.

      Delete
  2. அருமையான படைப்புப்பதிவு

    ReplyDelete
  3. அருமையான படைப்புப்பதிவு

    ReplyDelete