புத்தகங்கள் என்ன செய்யும்? புத்தகங்கள் அறிவை விரிவுசெய்யும். விரிந்த நல்அறிவு
நல்லவை, தீயவைகளை பிரித்து பார்க்க கற்றுத்தரும். தீயவைகளை பழுது பார்க்க
சொல்லித்தரும். ரௌத்திரம் பழக்கும். புத்தகங்கள் மனிதனை பேராண்மை பெறச்
செய்யும். இந்த வாழ்கையை, உலகை ரசிக்கச்
சொல்லித்தரும். உலகநாடுகளுக்கிடையே இடையே குறுக்கும் நெடுக்கும்மாய் இருக்கும்
எல்லைக் கோட்டுக்கம்பிகளை அறுத்து நம் மனதிற்கு நினைத்த மாத்திரத்தில் எங்கும்
செல்லும் வித்தையை கற்றுத்தரும். மாயவரத்தில் இருந்துகொண்டு மாஸ்கோவில் ஒரு புழுதிபடிந்த
மதுபான விடுதியொன்றில் குடித்துவிட்டு அடித்துக்கொள்ளும் ஒரு கூட்டத்தில் நாமும்
ஒருவராய் இருந்துவிட்டு வரலாம். நம் அறையில் இருந்தபடியே, “உலகத் தொழிலாளர்களே
ஒன்றுபடுங்கள்” என்று அறைகூவல் விடுக்கும் மார்க்சின் பேச்சில் வீறுகொண்டு எழலாம்.
வட்ட மேசை மாநாடுகளில் அம்பேத்கரின் செறிவுமிக்க உரைகளை அவர் அருகே நாற்காலி
போட்டு அமர்ந்து கேட்டு மெய்சிலிர்க்கலாம். எந்தக் கடவுச்சீட்டும் தேவையில்லை.
மண்டிக்கிடக்கும் பிற்போக்ககுத் தனங்களைத் தன் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு
ஊர் ஊராய் பயணித்து விரட்டியடித்த பெரியாரோடு நாமும் சேர்ந்தே பயணிக்கலாம்.
வறுமையில் வாடியபோதும்
கேளடா மானிடவா -- எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை யில்லை -- எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்
உணவுக்கு கவலையில்லை -- எங்கும் உணவு கிடைக்குமடா
பணமும் காசுமில்லை -- எங்கு பார்க்கினும் உணவேயடா
என வீதியில் உணவுக்கு திரிந்த பறவைகளின் பசிக்கு
கவிபாடிய மகாகவியுடன் கவிவிருந்து உண்டு வரலாம்.. சில புத்தகங்கள் பல நாட்களுக்கு
நம் தூக்கத்தை தின்று விழுங்கும்.
மக்சீம்
கோர்கியின் எழுத்துக்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. இயற்ப்பெயர் அலெக்சி மக்சிமொவிச்
பெஷ்கோவ். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பெஷ்கோவ், தன்
கண்டிப்பு மிக்க தாத்தாவிடமும் பாட்டியிடமும்தான்
வளர்ந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக 8 வயதிலேயே வேலையில் சேர்ந்தார்
பெஷ்கோவ். கிடைத்த வேலைகளைச் செய்தார். வேலைகளுக்கு இடையிலேயே எழுதவும்,
படிக்கவும் கற்றுக்கொண்டார். ருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய
மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தனது இருபத்தியோராம் வயதில் ருஷ்ய நாட்டை நடந்தே
சுற்றித் திரிந்தார். அப்படிச் சுற்றித்திரிந்த காலங்களில் தனக்குக் கிடைத்த
அனுபவங்களையும், பார்த்த மனிதர்களையும் பின்னாளில் தன் கதைகளில்
கதாப்பாத்திரங்களாக உருவாக்கினார். “மகர் சுத்ரா” எனும் தனது முதல் சிறுகதையை
மக்சிம் கோர்க்கி (கோர்க்கி என்றால் பாவம்செய்தவன் என்று பொருள்) எனும்
புனைப்பெயரில் எழுதத் துவங்கினார். லெனினின் நட்பு கிடைத்து ரஷியப் புரட்சிக்கு
தன் எழுத்துக்களின் மூலம் பெரும் உதவிகளைப் புரிந்தார். தன் எழுத்துக்களுக்கு
கிடைத்த வருவாயின் மூலம் தேவையான பண உதவிகளைச் செய்தார். அவர் அமேரிக்காவிற்கு
குடியேறிய பொழுது ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்ததுதான் “தாய்” நாவல். கோர்கியின் படைப்புகளில் ஆகச் சிறந்ததாகக்
கருதப்படுவது 1907-இல் அவர் எழுதிய தாய் நாவல். இன்றும் செவ்வியல்
இலக்கியங்களில் சிறந்தவொன்றாகக் கருதப்படுவது சிறப்புக்குரியது. இந்நாவல் உலகின்
பலவேறு மொழிகளில் பெயரக்கப்பட்டது. ஒரு சராசரித் தாயாக அறிமுகமாகி பிறகு இறுதியில்
உண்மை மகிழ்ச்சி என்ன என்பதை கண்டுகொண்டு ஒரு புரட்சியாளராக பரிணமிக்ப்பது தான்
தாய் நாவல்.
அழுக்குபடிந்த நகரத்தில் பிரும்மாண்டமாய் கிளைத்து
முளைத்து நிற்கும் தொழிர்ச்சாலைகள். உழைத்துக் களைத்த தொழிலாளர்கள் ஆலைச் சங்கின்
அழைப்புக்கு அடித்து மோதிக்கொண்டு செல்வதில் இருந்து நாவல் துவங்குகிறது. காலையில்
துவங்கி மாலை வரை தொழிலாளர்கள் தங்களது முழு சக்தியையும் ஆலையில் தொலைத்து மாலை
மதுக்கடைகளில் மூழ்கி பிறகு உணவருந்தி தூங்கிவழிந்து மீண்டும் அடுத்த நாள் ஆலைச்
சங்கின் ஒலியில் சக்தியை திரட்டிகிகொண்டு செல்வதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
தொழிற்சாலைகளுக்கு ஏனிந்த பசி, உழைப்பை கொட்டித்தீர்க்கும் தொழிலாளர்களுக்கு
ஏனிந்த கீழான வாழ்கை? ஆலைகளும் அதன் முதலாளிகளும் வளர்ந்துகொண்டே போக அதற்கு மூலகாரணமான தொழிலார்களின் வாழ்கை
மட்டும் ஏன் இப்படி பின்னோக்கிப் போக வேண்டும். முதலில் அதன் காரணத்தைத்
தெரிந்துகொள்வது அவசியம். ஐரோப்பாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி
கண்டுபிடிக்கப்பட்டதும், கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கா
கண்டுபிடிக்கப்பட்டது என சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து தேவைகள் உயர்ந்து
சென்றன. இந்நிலையில் தான் தொழில் துறை பிரும்மாண்ட வளர்ச்சிபெற்றது. மனிதனின்
தனித்தன்மைகள் தொழிற்சாலைகளின் முன் காணமல் போனது. ஆண் பெண் பேதமின்றி உழைப்பு
தெரிந்த அனைவரையும் தொழிற்சாலைகள் விழுங்கித் தின்றன. தொழிற்சாலைகள் மனிதனின்
உழைப்பைச் சுரண்டி தனது முதலாளியின் வயிற்ரை அளவில்லாமல் நிரப்பியது. ஒருநாளைக்கு
பன்னிரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தங்களது உழைப்பை கொட்டித் தீர்த்தனர்.
ருஷ்யாவின் அத்தகைய ஒரு தொழிற்சாலைதான் கதைக்களம். அங்கு
பணிபுரியும் மிகயீல் விலாசவ் அவனது மனைவி பெலகேயா நீலவ்னா. விலாசவ் ஒரு முரட்டு
ஆசாமி, தொழிற்சாலையில் சிறந்த அவன் தான் சிறந்த தொழிலாள, நல்ல பலசாலியும் கூட.
குடித்துவிட்டு யாரிடமாவது சண்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்து மகன் பாவெலையும்,
மனைவி நீலவ்னாவையும் அடித்துத் துன்புறுத்துவது தான் அவனது வாடிக்கை. ஒருமுறை மகன்
பாவெல் எதிர்த்தான் என்பதற்காக, இனி கூலிப் பணத்தை தான் தரப்போவதில்லை என்றும் உன்
மகனிடமே பெற்றுக்கொள் என்றும் கூறிவிட்டான். கூலிப்பணம் அனைத்தையும் குடித்து
குடித்து இரண்டே வருடங்களில் செத்துப்போனான் மிகயீல் விலாசவ்.
பாவல் விலாசவ், வாலிபன் தந்தையைப் போலவே அவனும் ஒருநாள்
குடித்துவிட்டு வீடு வந்தான். மனம்வருந்தி
பாவெலிடம் இனி குடிக்கக்கூடாது என்ற
நீலவ்னாவிடம், “அனைவரும் தான் குடிக்கிறார்கள்” என்றான். உனக்கும் சேர்த்து உன்
அப்பா குடித்துத் தீர்த்திவிட்டார் என்றால். வாழ்வில் எந்த சுகத்தையும்
அனுபவிக்காத துக்கமான தன் அம்மாவின் முகத்தைப் பார்த்த பாவெல் தன் தவறை
உணர்ந்தான். அவர்களது வாழ்கை மாறத்துவங்கியது. அவனது வீட்டு அலமாரியில்
புத்தகங்கள் சேர்ந்துகொண்டே இருந்தன. பாவெலைத்தேடி புதிய புதிய நண்பர்கள்
வீட்டிற்கு வரத்துவங்கினர். அவர்கள் அனைவரும் காரசாரமாக விவாதிப்பதையும் தன் மகன்
அவர்களிடம் தன் கருத்துக்களை உறுதிபட எடுத்துரைப்பதையும் தள்ளி நின்று ரசிப்பது
நீலவ்னாவிற்கு பிடித்திருந்தது. வந்திருப்பவர்களுக்கு தேநீர் பரிமாறுவது
அவர்களுக்கு தேவை யானவற்றை செய்துதருவதையும் வாடிக்கையாகக் கொண்டாள் தாய். ஆனால்,
பாவெல் ஏன் புத்தகங்களை ரகசியமாகப் படிக்கவேண்டும்? இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்,
அப்படி என்ன விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்று நீலவ்னாவிற்கு அடிக்கடி
தோன்றும். அதை ஒருநாள் பாவெலிடமே கேட்டுவிடுகிறாள் தாய். அதற்கு பாவெல்
“இவையெல்லாம் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். நான் உண்மையை தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்” என்றான். உறுதியான அவனது வார்த்தைகளைக் கேட்ட தாய் அமைதியாகிப்
போனாள். தன் கடவுளிடம் தன் மகனைக் காக்கும்படி வேண்டிக்கொண்டாள். தன் மகன் ஒரு
“சோசலிஸ்ட்” என்பதை உணரத்துவங்குகிறாள்.
பாவெல்லின் வீட்டில் நண்பர்கள் கூடிப் பேசுவதும் புதிய
மனிதர்கள் வருவது அவர்கள் வசித்த இடத்தில் சலசலப்பை உண்டுபண்ணின. தங்கள் வீட்டை
யாரோ கண்காணிப்பது போல் தோன்றியது நீலவ்னாவிற்கு. தொழிற்சாலையில் புரட்சிகர
கருத்துக்களைத் தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் அதிகமாக பரவிவருகிறன என
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பேசிக்கொண்டனர். அந்தப் பிரசுரங்கள் மக்களை
தூண்டிவிட்டன. ஒவ்வொன்றாக தொடர்ந்து வரத்துவங்கின. இவையனைத்தும் பாவெல் மற்றும்
அவர்களது நண்பர்களின் வேலை தான் என்பதை விரைவிலேயே தெரிந்துகொண்டாள் தாய் நீலவ்னா.
பாவெல்லின் மதிப்பு அவர்கள் வசித்த பகுதியில் உயரத்துவங்குகிறது. எந்நேரமும் நம் வீட்டை போலீசார் சோதைனையிடலாம்
என்று தொழிற்சாலையில் சாப்பாடு விற்கும் மரியா சொல்லிவிட்டுப் போனாள். சிறிது
நாட்கள் கழித்து பாவெல் கைது செய்யப்படுகிறான். பாவெல் தன் நண்பன் அந்திரெய்யை
தாயின் துணைக்கு தங்கவைத்துவிட்டு சிறைபுகுகிறான். துண்டுப்பிரசுரங்கள் வருவது
நின்று போனால், அவற்றை வெளியிட்டது பாவெல் தான் என்பது நிருபணமாகி தண்டனை
பெற்றுவிடுவான் என்பதால் தாய் நீலவ்னா துண்டுப்பிரசுரங்களை ஆலையில் சேர்ப்பிக்கும்
வேலையை ஏற்கிறாள். ஏற்ற வேலையை கச்திதமாகவும் செய்யத் துவங்குகிறாள். வேலை
தடைபடாமல் தொடர்வதை தன் மகனுக்கு தெரிவிக்கவும், தானும் மகனின் உன்னத பணியில்
உதவுவதை அவனுக்கு தெரிவிகக் வேண்டும் என்று உவகை கொள்கிறாள். நீலவ்னாவின் வாழ்கையும் கொஞ்சம் கொஞ்சமாக
மாறிக்கொண்டுதான் இருப்பதை அவளும் உணரத் துவங்கினாள்.
பாவெல்லின் நண்பன் அந்திரியூஷாவின் துணையோடு படிக்கத்
துவங்கினாள். தான் இத்தனை ஆண்டுகாலம் படிக்க இயலாமல் போனதைப் பற்றி பெரிதும்
வருந்தினாள். ஒருவழியாய் சிறையில் பாவெல்லைப் பார்க்க அனுமதி கிடைக்கிறது.
பாவெல்லிடம் அந்தப் பிரசுரங்கள் மீண்டும் ஆலையில் தலை காட்டத்துவங்கி விட்டதையும்
அந்த வேலையை தான் ஏற்றுக்கொண்டதையும் சூசகமாகத் பெருமையுடன் தன் மகனுக்கு
தெரிவித்துவிட்டாள். மக்களின் மனநிலையை எண்ணி அந்திரியூஷாவிடம் வருத்தமுறுகிறாள்.
இந்த மக்கள் இப்படிபட்ட வாழ்கைமுறைக்கு பழக்கப்பட்டுவிட்டதையும் எதுவுமே நடக்காதது
போல அவர்கள் நடந்து கொள்வதையும் எண்ணி உணர்ச்சிவயப்பட்டு கூறுகிறாள். அந்திரியூஷா
தாய் நீலவ்னாவிற்கு வராலற்றுப் புத்தகங்களை வாசித்து காட்டுகிறான். வீட்டிற்கு மேலும் புதிய நபர்கள்
அந்திரேயை சந்திக்க தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஒருமுறை நகரிலிருந்து
வந்திருந்த யுவதி ஒரு சிறிய பொட்டலத்தை அந்திரேய்யிடம் கொடுத்துவிட்டு திரும்பச்
செல்லும் பொழுது “ தோழரே, போய்வருகிறேன்” என்று தாய் நீலவ்னாவைப் பார்த்து
கூறிவிட்டுச் சென்றாள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை கடைக்கு சென்றுவிட்டு திரும்பி
வீடு வந்ததும் மகன் பாவெல் விடுதலையாகி வீடு வந்து சேர்ந்திருப்பதை கண்டு
மகிழ்ச்சியுருகிறாள். பாவெல் அடுத்து வரவிவிருககும் மே தினக் கொண்டாட்டத்திற்கான
ஏற்பாடுகளை தொடங்குகிறான். இம்முறை தானே தலைமையேற்று செங்கொடியை ஏந்திச் சென்று
பேரணியை வழிநடத்திச் செல்வது என்று முடிவுசெய்கிறான். நிகழும் அநீதிக்கு எதிராக
மக்களை ஒன்று திரட்டி போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காக தன் மகன்
மீண்டும் கைதுசெயயப்ப்படலம் என்று எண்ணியும், மகனை மீண்டும் பிரியப் போவதையும்
நினைத்து வருந்துகிறாள் தாய் நீலவ்னா.
பேரணிக்கு பாவெல் தலைமைதாங்கி செங்கொடியை கையில் பிடித்து முன்னே நடக்க அடுத்து
அந்திரேய் தொடர்ந்தான். தாயும் பெரும் திரளான தொழிலாளர்கள் அவர்களுடன் பேரணியில்
செல்கின்றனர். அவர்கள் உணர்ச்சி ததும்பும் பாடல்களைப் பாடியவண்ணம் முன்னேறி
செல்கின்றனர். போலீசார் வந்து அவர்கள் விரட்டி, பாவெலை கைது செய்கிறார்கள்.
விழுந்த கோடியை தேடித் பிடித்து கையில் எடுத்துக்கொண்ட தாய் நீலவ்னா மக்களுக்காகத்
தானே அந்த இளைஞர்கள் போராடுகிறார்கள்
அவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அங்குள்ள மற்ற தொழிலாளர்களை
கேட்கிறாள். உணர்ச்சி ததும்ப பேசிய பேச்சு அங்கிருந்த மக்களின் மனதில் ஒரு புதிய
அலையாய் அடித்தது.
பாவெலும், அந்திரேயும் கைது செயயப்பட்டதால் தொழிற்சாலை குடியிருப்பை விட்டு முதல் முறையாக
வெளியேறி நகருக்கு செல்கிறாள் தாய் நீலவ்னா. . அங்கு முதல் முறையாக உலகைக்
காண்கிறாள். அங்கிருத்து புரட்சிக்கான தன் பாதையில் வீறுகொண்டு புரட்சிகரத் தாயாக
பரிணமிப்பதே தாய் நாவலின் மீதிக் கதை. புத்தகங்கள் ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய
தாக்கத்தை ஏற்படுத்துகிறன என்பதை தெளிவாகவும், முதலாளித்துவம் மக்களின் வாழ்கைத்தரத்தை எப்படி கீழே
இருத்தியிருக்கிறது, புரட்சியை
நோக்கி அது எவ்வாறு நம்மை உந்திச் செல்கிறது என்பனவற்றை விவரித்து ஒரு நல்ல
கதையம்சத்தோடு கூறியிருப்பது நாவலின் தனிச் சிறப்பு. ரஷ்யாவில் பள்ளிகளில் மக்சிம்
கோர்கியின் தாய் நாவல் பாடமாக குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டு புரட்சியின்
விதை சிறுவயதிலேயே தூவப்பட்டு வருகிறது. இதை நம் கல்வித்துறை செய்யுமா என்பது
பெருங்கேள்வி!
சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்க்கி பள்ளிகூடமே சென்றதில்லை என்பதும், 1906இல் எழுதப்பட்ட தாய் நாவலுக்கு உலகெங்கும் நூற்றாண்டுவிழாக் கொண்டாடப் பட்டதும் வியக்கத்தக்க செய்திகள்! இதைப்படித்த லெனின், கார்க்கியிடம், “பாவெல் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? புரட்சியில் காதல், கல்யாணம் எதுவும் தடைசெய்யப்படவில்லையே தோழர் கார்க்கி?” என்று கேட்டது அற்புதமான கேள்வி! உலகின் நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்நாவல் பற்றி எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுகள், வாழ்த்துகள்!
ReplyDeleteகூடுதல் தகவல்களுக்கு நன்றி அப்பா!
ReplyDelete