தொடரும் தோழர்கள்

Wednesday, December 20, 2017

ஒரு பயணமும்! ஒரு வார்த்தையும்!

அலுவலகத்தில் அன்று வரதனுக்கு இறுதிநாள். இன்னும் சில நாட்களில் துபாயில் வேலைக்கு சேரவிருக்கிறான். கலியாணமாகி இரண்டு வருடத்திற்கு பிறகு குழந்தை பிறந்து நாலு மாதம் தான் ஆகிறது. மனைவியையும், மகனையும் பிரிந்து செல்ல அவனுக்கு மனசு இல்லை. ஆனால் என்ன செய்வது வாங்குற சம்பளம் தங்குறதுக்கும், தின்கிறதுக்குமே சரியாய் இருந்தது. இப்பொழுது மகன் பிறந்திருக்கிறான். இனியும் இப்படி சமாளிக்க முடியாது. அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும். நிறைய படிக்க வைக்கணும் அதுக்கு பணம் வேணுமே. இன்றைய தேதியில் ஒரு குழந்தையை படிக்கவைக்க பெற்றோர் இருவரும் வேலைக்கு போனால் தானே சமாளிக்கமுடிகிறது.

ஒருவழியாய் துபாய்க்கு ஆள் எடுக்கும் ஒரு கம்பெனியில் லட்ச ரூபாய்  பணத்தைக் கட்டி  வேலையும் உறுதியாகி விட்டது. வெளிநாடு போய் சம்பாதித்து விரைவிலேயே வாங்கிய கடனை அடைத்திவிடலாம். சிறிது காலம் வேலை பார்த்து சிறுகச் சிறுக சம்பாதித்து ஒரு வீட்டைக் கட்டிவிட்டு ஊரிலேயே ஒரு தொழிலை தொடங்கினால் அப்படியே காலம் ஓடிவிடும் என பெரும்பாலானோர் போல வரதனும் விமானத்தில் கனாக் கண்டுகொண்டே துபாய்க்கு பயணித்தான்.

விமானத்தில் ஏறியதிலிருந்து, விமான நிலையத்தில் அழுகையோடு வழியனுப்பி வைத்த மனைவியின் முகமும், கட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று அழுது அடம்பிடித்த மகனின் முகமும், விமானத்தில் வரதனைப் போன்றே புது உலகைத்தேடி  உடன் பயணித்த பயணியரின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியைக் கண்டதும் கொஞ்சம் மறைந்து தான் போயிற்று.  துபாயில் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கப் போகிறோம் என்று விமானத்தில் அறிவிப்பு வருகிறது. சன்னலோரம் எட்டிப் பார்த்து இந்தப் பாலைவனத்தில் என் சோலைவனம் எங்கோ இருக்கிறது என்று சிறியதாய்த் தெரிந்த கட்டிடங்களை பார்த்துக்கொண்டே புதிய வாழ்கையை தேடுகிறான்.

துபாயில் தரையிறங்கியதும் குடியேற்ற உரிமை சரிபார்க்கப்பட்டு கொண்டுவந்த பெட்டியை தூக்கிக் கொண்டு வாயிலுக்கு வர வரதனை அழைத்துச் செல்ல அலுவலக ஆள் ஏற்கனவே வந்து காத்திருந்து சிரித்த முகத்துடன் வரவேற்று தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று வரதனின் படுக்கையை காட்டி, இதுதான் உங்கள் படுக்கை சற்று ஓய்வெடுங்கள் நாளை முதல் வேலைக்கு செல்லலாம் என்று சொல்லி சென்றுவிட்டார். புதிய ஊர், புதிய மக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தது, நாளை புதிய வேலையில் சேர்ந்து நன்கு உழைத்து பொருளீட்டி, மனைவி மகனுடன் இனி வாழ்க்கையில் எந்தக் கவலையுமே இல்லை என்று நிம்மதியாய் உறங்கிப்போனான்.  பொழுது விடிந்து, வேலையில் சேர்ந்து, புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைத்து மாலை அறைக்கு வந்ததும் ஒன்று விடாமல் மனைவிக்கு தொலைபேசியில் சொல்லி மகனின் குரலைக்கேட்டு பிரிவு வருத்தினாலும் இனி வரப்போகும் வாழ்கையை எண்ணி நன்கு தூங்கிப்போனான்.

புதிய வாழ்கை வரதனுக்கு விரைவிலேயே பழக்கத்திற்கு வந்துவிட்டது. காலையில் வேலைக்கு செல்வது, மாலையில் மனைவியுடன் தொலைபேசியில் பேசுவது, விடுமுறை நாட்களில் ஊரைச்சுற்றிப் பார்ப்பது, மாத மாதம் வீட்டிற்கு தேவையான பணம் அனுப்புவது என்று அவன் நினைத்த வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்தது. அலுவலகத்தில் எந்த இடையூறு வந்தாலும் வீட்டில் இருக்கும் மனைவி, மகனை நினைத்து அலுக்காமல் வேலை செய்து பொருளீட்டினான் வரதன். நாட்கள் விரைவாகவே சென்றது. ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை 45 நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு தருவார்கள் சம்பளமும் தந்து, போய்வர விமான பயணச்சீட்டு தந்து அனுப்பிவைப்பார்கள்.

விடுமுறைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கும் பொழுதே வரதனுக்கு பயணத்திற்கான ஏற்பாடுகள் அலுவலகத்தில் துவங்கிவிட்டார்கள். தேதியைக் குறித்து கொடுத்து   விமான பயணச்சீட்டும் முன்பதிவும் செய்துதந்துவிட்டார்கள். வரதனுக்கு தலைகால் புரியவில்லை. நீண்ட நெடுநாளைக்கு பிறகு பிரிந்து வந்த மனைவியையும் மகனையும் காணப் போகிறோம் என்ற இன்பம் மனதில் குடிகொண்டு அவனை திக்கு முக்கு ஆடச் செய்தது. அறைக்கு வந்ததும் மனைவியிடம் சொல்லி, வீட்டில் பெற்றோருக்கு சொல்லி, நன்கு மழலை பேசும் மகனிடம் சொல்லி மகிழ்ச்சி வயப்பட்டுப் போனான்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை ஒருவருடம் 3 மாதங்கள் சட்டென ஓடிவிட்டது இந்த மூன்று மாத காத்திருப்பு இழுத்தடித்தது வரதனுக்கு. நாட்களை எண்ணினான். பயணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. வரதனுக்கு எதுவும் பிடிக்கவில்லை. மனைவி மகனுடன் ஊர் சுற்ற வேண்டும், திரைப்படத்திற்கு போக வேண்டும், மகனுடம் நிறைய விளையாட வேண்டும் என்று தன ஆசைகளை தினமும் மனைவியிடம் சொல்லி ஆசைகளை அடுக்கிக் கொண்டே போனான்.  மனைவி, மகனுக்கு விளையாட்டுப் பொருள்கள், புத்தாடைகள் என தேடித் தேடி வாங்கி சேகரித்தான்.


அந்த நாளும் வந்தது. விமானத்தில் ஏறி வீடிற்கு செல்லத் தயாரானான். ஊருக்கும் விமான நிலைத்திற்கும் தொலைவு அதிகமாய் இருந்ததால் வீட்டில் இருந்து யாரும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு நண்பரிடம் சொல்லி வாடகைக்கு கார் சொல்லிவைத்திருந்தான். அதிகாலை விமானம் விட்டிறங்கி வீட்டுக்கு சென்று சேர்வதற்குள் மணி எட்டு அடித்தது. வாசலில் நின்று வீட்டுக்கதவை தட்ட தவழ்ந்து திரிந்து கொண்டிருந்த மகன், ஓடி வருவது  நன்கு தெரிந்தது. வந்த மகன், அம்மா! யாரோ மாமா வந்துருக்காங்க என்றான். தலையில் இடிவிழுந்தது வரதனுக்கு.

4 comments:

  1. நல்லது, படைப்புலகம் நிறையப்படைக்கவும் படிக்கவும் வைக்கும்.சின்னச்சின்ன சொந்த அனுபவங்களைப் பொதுமைப் படுத்தி எழுத எழுத எழுத்து நிறக்கும். தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமை! மென்மேலும் எழுத மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete