தொடரும் தோழர்கள்

Wednesday, March 28, 2018

வெள்ளாயி - சிறுகதை

நார்க் கட்டில் முதுகில் சுருக் சுருக்கென குத்தினாலும் இதமாய்  தான் இருந்தது. துண்டை விரித்துபோட்டு  தலைக்கு கையை வைத்துப் படுத்து, தலைக்கு மேல் பச்சைப் போர்வையில் துளித்துளியாய் மஞ்சள் நிறத்தில் முத்து கோர்த்தது போல காற்றில் அலைந்து கொண்டிருந்த  வேப்பம்பழங்களை பார்த்துக்கொண்டே முன்னர் இதனருகில் ஒரு பெரிய மாமரம் இருந்தது நினைவுக்கு வந்தது! 


சிறுவயதில் இங்கு வரும்போது முத்துவீரும் நானும் அதில் ஏறி விளையாடுவோம். நகரத்திலிருந்து வந்ததாலோ என்னவோ அவன் என்னை சிறப்பாய் கவனிப்பான். ஓடி ஓடிச் சென்று எனக்கு தின்பதற்கு எதையாவது கொண்டு வந்து தருவான். கிராமத்தில் வளர்வதால் அவனைவிட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் எனக்கு மேலெழும். சாதாரண விஷயத்தைக்கூட தெரியாது என பந்தா காட்டுவது நகரவாசிகளுக்கு பழக்கம். அணில் கொரித்து போட்ட பழம் மற்றதை விட சுவை கூடுதலாக இருக்கும். பார்க்க காய் போல இருந்தாலும் உள்ளே நன்கு பழுத்திருக்கும். அணிலுக்கு எப்படி இந்தப் பழம் பழுத்துவிட்டது என்று தெரியும் என நினைத்து ஆச்சர்யப்படுவேன். மேலே பறவைகள் கூடு கட்டியிருக்கும். எப்பொழுதும் குஞ்சுப் பறவையின் ஒலி கேட்ட வண்ணம் இருக்கும். இன்று அந்த மாமரம் இல்லை.    


யையா ராசா! பொட்ட வெயில்ல இப்படி படுத்து கிடக்குற உள்ள வந்து படுயா! உம்பொண்டாட்டி வந்தா  வையப்போறாயா!


அப்பத்தாளின் குரல்! 

அப்பத்தாளுக்கு வயது 87 இருக்கும். வயதேறியதால் குரலில் ஒருவித அதிர்வு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. வெற்றிலை போட்டு கரையேறிய வாய். முன் பல் இரண்டு மட்டும் விழாமல் கெட்டியாய் பிடித்துக்கொண்டு இருக்கிறது.  எதையாவது பேசிக்கொண்டு, முனுமுனுத்துக்கொண்டே அவள் அம்பாரியில் பவனி வருவது போல முன்னும் பின்னும் ஆடி ஆடி வெற்றிலையை இடித்துக்கொண்டு இருப்பாள். அந்தச் சிறு உரலுக்கும் அப்பத்தாளின் கைகளுக்கும் அப்படி ஒரு உறவு! எத்தனை முறை இடிபட்டாலும் அப்பத்தாளின் கையின் மேல் கோபம் கொண்டதே இல்லை. பார்வை மங்கிய பின்னும் சீரான தாளத்தில் ஒரே வலுவில் இடித்துக்கொண்டே இருப்பாள்.   இயல்பாகவே அவள் பேச்சில் ஒரு ராகம் இருக்கும். சிறுவயதில் அப்பத்தா எங்கள் வீட்டிற்கு வரும்போது எல்லாம் 


அப்பத்தா! கொண்டா நான் இடிச்சு தரேன்! 


என்று சொல்லி வாங்கி, இடிக்க உட்கார்ந்தால்! கதைகள் ஒவ்வொன்றாக வரத்துவங்கும். கதை கேட்க சிறந்த நேரம் அதுதான். அப்பத்தா அவளது, வெளுத்த தலைமயிரை, தூக்கி முடிந்த கொண்டையை ஆட்டி ஆட்டி கதை சொல்லும் பொழுது தண்டட்டிகள் காற்றில் ஊஞ்சல் ஆடும். நான் அதை பார்த்துக்கொண்டே இடிப்பேன். அவளது காது மடல் தொட்டுப் பார்த்தால் மிருதுவான கொழுப்பு போல இருக்கும். இடித்துத் தந்த வெற்றிலையை  உருட்டி வாயில் போட்டு ஒரு சுழற்று சுழற்றி தன் நாக்குச் சிவப்பை காண பல்லில்லா வாயை குவித்து நாக்கை நீட்டி அவள் அதன் நிறத்தை பார்க்கும் அழகே தனி. சுண்ணாம்பு போதவில்லை என்றால் சிறு முத்தளவு எடுத்து வாயில் திணித்து சேர்த்து அவள் அதை மென்று குதப்பி கதை சொல்லத் துவங்குவாள். கதை என்றால் அது கற்பனையா? இல்லை உண்மையில் நிகழ்ந்தது என்று சத்தியமே செய்வாள். அவள் பெரும்பாலும் அரசர் கதைகளையே சொல்வாள். ஒவ்வொரு கதையிலும் அரசரின் வீர பிராதாபங்கள் பளிச்சிடும். கதை முடிந்ததும் கதைக்கேற்ப நான் நம்பும்படி  ஏதாவது ஒரு ஆதாரத்தை காட்டுவாள். அப்படித்தான் ஒரு முறை ராஜா வீட்டு கல்யாணக் கதையை சொல்லிவிட்டு,  



அந்த ராசா வீட்டு கல்யாணத்துல எங்க எல்லாருக்கும் பொடவ எடுத்து கொடுத்தாவ! அந்த சீல தான் இது!


எனத் தான் உடுத்தியிருக்கும் தண்ணீர் பார்த்து பல நாள் ஆன சீலையை, ஏதோ ஆடை விளம்பர அழகி போல் காற்றில் விரித்து அலைய விடும் பொழுது அப்பத்தா உண்மையில் பேரழகி தான்.                 

யய்யா! சொன்ன கேளுயா! இப்புடி வெட்ட வெளியில படுத்து கிடந்தா கருத்து போயிடுவயா! 


என்று என்னை பின்நினைவில் இருந்து மீட்டேடுத்தாள் அந்தப் பேரழகி!


நீ போ அப்பத்தா! நான் நிழல்ல தானே படுத்துருக்கேன்!
ஒன்னும் சொல்லமாட்டா! நாம்பாத்துகிறேன் அப்பத்தா! 
நீ வெயில்ல நிக்காம உள்ள போய் கொஞ்ச நேரம் உக்காரு! 
நான் வந்ததுல இருந்து ஒரு இடத்துல நிக்காம ஓடிட்டே இருக்க. 


சரி இருயா! இரு வரேன்!


எனச்சொல்லி உள்ளே சென்ற அப்பத்தா கையோடு ஒரு தலையணையும் விரிக்க ஒரு பழுப்பேறியே சமுக்காளமும் கொண்டு வந்தாள். 


வருசம் முழுக்க ஒத்தயா உக்காந்தே தானேயா இருக்கேன்!
நீ இப்பத் தான் வந்துருக்க என் சீமராசா!


என என் மோவாயை நீவி, எச்சில் பன்னீராய் தெறிக்க  உச்சி மோந்த அப்பத்தாளை கையை பிடித்து கட்டிலில் உட்கார வைத்தேன். அப்பத்தா முந்தானையை ஒரு உதறு உதறி சுற்றி, ஒட்டிப் போன வயிற்றில் சுருங்கிப்போன அவள் இடையின் பின் கொண்டு சொருகினாள். அப்பத்தாளை உற்று நோக்கினேன். ஒடிசலான தேகம் மேலும் இளைத்துத்துப் போயிருந்தாள். அப்பத்தாளின் முகச் சுருக்கம் இன்னும் கூடிப்போய் இருந்தது. 


ஏன் அப்பத்தா இங்க ஒரு மாமரம் இருந்துச்சில்ல! ஆமாப்பா! இருந்திச்சு. அத வெட்டிபுட்டு தானே உங்கொப்பனும் பெரியப்பனும் இந்த வீட்ட கட்டினாவ!


எனச் சொல்லிவிட்டு சுருக்கம் விழுந்த அவள் முகத்தை தன் முந்தானையால் துடைப்பது போல தன் சோகத்தை மறைக்க முயன்றாள். பேச்சை மாற்ற எண்ணிய நான்,   


அப்பத்தா முத்துவீர் இப்ப எங்க இருக்கான்? என்ன பண்றான்?

அவன்தான் செத்துடானே! தெரியாதா?

என்ன அப்பத்தா சொல்ற? எப்ப? எப்படி செத்தான்?

ஆக்சிடென்ட்ல! அவனுக்கு ஆயுசு அம்புட்டுதான் என்ன செய்ய!
சரி அதவிடு உம்பொண்டாட்டி எப்புடி? சந்தோசமா வச்சுக்கப்பா! 

அழகுபெத்த புள்ளயா அவ! உங்கொப்பன் என்ன சொன்னான்?


எனக்கென்ன அப்பத்தா சந்தோசமா இருக்கேன்! அப்பா நல்லா இருக்காங்க!


அப்பாதான் ஏர்போர்ட்க்கு வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க!


அவுக வீட்ல அவுக அம்மா அப்பாவ நல்லா பாத்துக்னும்யா கட்டினதோட அப்டியே அத்துவிட்டுட கூடாது.


சரி அப்பத்தா!


எங்க காலத்துலலாம் காதல்னு சொன்னாலே வெட்டி போட்டுடுவாக! அதுக்காகவே மனசுக்குள்ளயே போட்டு முழுங்கிடுவோம்! இப்பயும் எங்க திருந்திருக்காணுக! படிச்சு பெரிய உத்தியோகம் போனாலும் கூடவே இந்த சனியனும் இழுத்துகிட்டு தானே வருது!



இல்ல அப்பத்தா இப்போலாம் அப்படி இல்ல காலம் மாறிடுச்சு! 


போடா! பொசகெட்ட பயலே எவன் சொன்னான்? இந்தா முத்துவீரு ஆக்சிடெண்ட்ல செத்த்தான்னு சொன்னேனே! அது என்ன ஆக்சிடென்ட்டா? ஆக்சிடென்ட் மாதிரி தானே செஞ்சாக!


எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஒரு நிமிடம் அனைத்தும் அப்படியே நின்றது. என்னுடம் விளையாடித் திரிந்த முத்துவீர் கொல்லப்பட்டான் என்பதை ஏற்க மனம் வரவில்லை. அழகாய் சிரிப்பான். அந்த சிரித்தமுகம் என் கண்முன்னே வந்தது சட்டென்று அவன் முகத்தில் சிவப்பாய் ரத்தம் வடிய அவன் கண்கள் மேலே சொருகி முகமெல்லாம் ரத்தம். சட்டென அப்பத்தா என்னை தட்டி,


என்ன முத்துவீர நினைச்சியாக்கும். அதெல்லாம் ஏதும் இங்க மாறல. உங்கொப்பன் ஏதோ ஒத்துகிட்டான் அவனும் வெளியூருல இருக்கான் நீயும் வெளிநாட்டுல இருக்கன்னு கல்யாணம் செஞ்சுவச்சான். அதே இங்கிட்டு இருந்தான்னா இந்த ஊரு பயக கொன்னு போட்ருப்பானுங்க.


ரி அதெல்லாம் நீ ஏதும் போட்டு குழப்பிக்காத. நீ உம்பொண்டாட்டிய பத்தி சொல்லு எங்க பாத்த? எப்படி பழக்கமெல்லாம்? கல்யாணத்துல உன்கூட உக்காந்து நாலு வார்த்த கூட பேசமுடியல! அதுக்கு பொறவு புள்ள பொறந்துதான் பாக்க கொடுத்துவச்சிருக்கேன். ஹம்ம்..


என பெருமூச்சு விட்டவளாய் என்னை ஒரு பார்வை பார்த்தாள்.


அவள நான் படிக்கிற இடத்துல தான் பாத்தேன் அங்க தான் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு!


என நான் சொல்லி முடிக்கும் முன்பே அப்பத்தா!


இதுக்குதான் எங்க அய்யா என்னய பள்ளிக்கூடமே அனுப்பல...
பொண்ணுக மனச அப்புடி கட்டிப்போட்டுட முடியுமா? அந்த அந்த வயசுல வர்றது பொன்னுவளுக்கு வந்துதானே தீரும் 


என்றாள் நக்கல் கலந்த சிரிப்பாக!


என்ன அப்பத்தா அப்போ நீயும் தாத்தாவும் விரும்பித்தான் கட்டிக்கிட்டிங்களா?


எங்க? அதுக்கெல்லாம் எங்க காலத்துல இடமே இல்ல. வெசத்த கரைச்சு கொன்னுடுவாக! இப்ப தானே அவுகவுக  கேவுரவத்த காப்பத்துறேன்னு நடுரோட்ல வெட்டி போடுறது எல்லாம். உங்கொப்பன் படிக்கிற காலத்தில கூட இப்புடி இல்லையேப்பா! 


பின்ன எதுக்கு சிரிச்சியாம்? சொல்லு அப்பத்தா? நீ வேற யாரையும் விரும்புனியா?


சட்றென்று பார்த்தாளே ஒரு பார்வை. கோபமும் ஆச்சரியமும் கலந்து, பிறகு சற்று நிதானித்து என்னை பார்த்து!


அட போடா போக்கெத்தபயலே! எப்ப வந்து என்ன கேக்குறான் பாரு

என சிரித்துக்கொண்டே எழ முயன்றாள். நான் விடாமல் பிடித்து உட்காரவைத்து 

அப்பத்தா இப்போ நீ சொல்லலைனா அவ வந்த உடனே நான் கிளம்பிடுவேன். ரெண்டு நாள் இங்க இருக்க வந்தேன், ரெண்டே நிமிசத்துல கிளம்பிடுவேன்

என அவள் காதல் கதை கேட்க ஆவலாய் பொய் கோபத்துடன் கேட்க அப்பத்தா சட்டென கலங்கிப்போனாள். 

யய்யா! அப்படி மட்டும் சொல்லாதயா! உங்கொப்பனோ பெரியப்பனோ என்ன வந்து பாக்குறது இல்ல. இருக்கேனா செத்தேனான்னு கூட கேக்க ஆள் இல்ல. நானா இருக்குறத பொங்கிபோட்டு சாப்பிட்டு இருக்கேன். நீ வந்து ரெண்டு நாள் இருக்கன்னு சொன்னது மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு. என் பேர பேத்திய அவுக புள்ளையோட ரெண்டு நாள் இருக்குற பாக்கியத்த பரிச்சுபுடாதயா 


என அப்பத்தா சொன்னதும் என் உடம்பு அதிர்ந்து அடங்கியது.


இல்ல அப்பத்தா நான் போகல சும்மா சொன்னேன். இங்கதான் இருப்பேன் 


என அவளை கட்டிக்கொள்ள அவளது உடம்பு நடுங்கிய நடுக்கம் என் உடம்பில் அதிர்வை ஏற்படுத்தியது      


உனக்கு என்ன என்கதை தானே அதுக்கு என்ன ராசா சொல்றேன் கேளு!


என கதை சொல்ல உற்சாகமாய் முகத்தை துடைத்துக்கொண்டு தயாரானாள் என் அப்பத்தா. சட்டென அந்த வயதிலும் அவள் முகம் மலர்ந்து மங்கிப்போன கண்கள் பளீரென ஒளி அடித்தது.


அவுக நம்ம அய்யாவோட நிலத்துக்கு வேலைக்கு வருவாக! அவுகள நான் பாத்தது அங்க தான். 
ஒருநா! அய்யா வீட்ல இருக்கும்போது பின்வாசல்ல சாப்பாடு வாங்க வந்தவகள எங்க அய்யா கூப்பிட்டு என்னமோ பேசிக்கிட்டு இருந்தாக. அப்போ தான் அவுகள நான் பக்கத்துலையே பாத்தேன்.


அவுக சும்மா ராசா மாதிரி இருப்பாக. உழைச்சு உழைச்சு உடம்பு இரும்பு கணக்கா இருக்கும். தலையில துண்ட கட்டிக்கிட்டு வேட்டிய மடிச்சு ஏர் கலப்பைய புடிச்சு அவுக உழுவுரத பாக்கவே தவம் கிடைக்கணும்.


சொல்லச் சொல்ல அப்பத்தாளின் குரலில் வயது குறைந்துகொண்டே வந்தது. 


சரி சரி உன் ஆள வர்ணிச்சது போதும் நீ மேல சொல்லு!


என சொன்னதும் சற்று அசந்தவளாய்!


உனக்கு என்னையா வந்துச்சு? அவுகள இப்ப பாத்தாலும் அப்படியே தான் இருக்காக முறுக்கு குறையாம.       


என்ன சொல்ற அப்பத்தா இங்கதான் இருக்காங்களா? 
சரி அப்புறம் என்னாச்சு சொல்லு?


எனக்கு மனசுல ஆச வந்துடுச்சு அவுகள அங்க நின்னு இங்க நின்னுனு பாத்துகிட்டே இருப்பேன். அவுக பக்கத்துல கூட வரமாட்டாக! ஒரு நாள் நானே நேரா போய்... 
இந்தாயா எனக்கு உன்ன புடிச்சுருக்கு!  உனக்கும் என்ன புடிச்சிருக்குன்னு தெரியும். பின்ன ஏன் ஓடி ஒளியிர?


அப்படின்னு கேட்டுபுட்டேன்!


அதுக்கு அவுக இங்கபாருங்கம்மா!
அய்யாவுக்கு தெரிஞ்சா கொன்னு போட்டிடுவாக...
பேசாம போயிடுங்கன்னு சொல்ல,


விட்டேன் ஒன்னு கன்னத்துல. 

எனக்கு தூக்கிவாரிப்போட்டது அப்பத்தா பயங்கரமான ஆளாகத்தான் இருக்கும் போல என நினைத்து கதை கேட்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என எனக்குள் சொல்லிக்கொண்டு மேலே கதையை கேட்கத்துவங்கினேன்.

விட்ட அறையில அவுக பதிலுக்கு எனக்கு ஒன்னு விட்டு! உன்ன கட்டிக்கிட்டு இந்த ஊரைவிட்டு ஓடிப்போய் வாழ விட்ருவானுகளா?


எங்க போனாலும் விடமாட்டனுங்க! மனச போட்டு குழப்பிக்காம போ! போய் உங்க அய்யா சொல்ற எவனையோ கட்டிக்கிட்டு உசுரோட வாழப்பாருன்னு சொல்லிட்டு திரும்பி பாக்காமா போயிட்டாக. 

நானும் உங்க தாத்தன கட்டிக்கிட்டு உங்க பெரியப்பனையும் உங்கப்பனையும் பெத்து வளத்து பேரம் பேத்தி எடுத்துட்டேன்.

ஆனா அவரு இன்னும் கல்யாணமே செஞ்சுக்கல.

என சோககத்தில் மூழ்கிய அப்பத்தாளை நான் சிறிது நேரம் பார்த்தேன். அவளது முதல் காதல் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. அவரைப்பற்றி அப்பத்தா பேசும் போதெல்லாம் அவள் கண்கள் அகல விரித்து சுருக்கி வெட்கப்பட்டு தன் முதல் காதலை நினைவுகூர்ந்தாள். காய்ந்து வறண்ட பூமியில் எங்கோ ஈரம் இன்னும் இருந்தது. 

ஏன் அப்பத்தா அவங்க கல்யாணம் கட்டிகல?

பொண்ணு எதுமே அமையலயாம் ! அவுக சொந்தத்துல
அவுக தங்கச்சிய கட்டிக்கொடுக்கவே ரொம்ப காலம் ஆச்சு! இப்ப தங்கச்சி புள்ளையவே தாம் புள்ளையா நினைச்சு வளர்த்து படிக்க வச்சாரு. இந்த ஊர விட்டு போக மாட்டேன்னு இப்பவும் இங்கயே இருக்காக. 


சட்டென்று யோசித்தவனாய் என் இரண்டு கைகளையும் கன்னத்தில் பாதுகாப்புக்கு வைத்துகொண்டு 


ஏன் ஆத்தா இப்ப ரெண்டு பேருமே யாருமே இல்லாம தனித்தனியா தானே வாழுறீங்க! அதுக்கு ரெண்டுபேரும் ஒன்ன வாழலாம்ல?

வந்ததே கோபம் அப்பத்தாளுக்கு என்னை முறைத்து பார்த்துவிட்டு என்னை திட்டுவதற்கு வாய் எடுத்தாள் அதற்குள் என் மனைவி வந்து என்னை காப்பற்றினாள். 


ஏண்டா! 
வாழ வேண்டிய வயசுல வாழவிடல! 
இப்ப இந்த வயசுல வாழ வைக்க வந்துட்டியா? 


இல்ல அப்பத்தா அங்க எல்லாம் இது சகஜம்!


அடே பேராண்டி!
அங்க வேணா இதெல்லாம் சகஜமா இருக்கலாம். இங்க இவனுங்க இருக்குற வரை எவனையும் சேர விடமாட்டானுங்க. 


லீவு கிடைக்கும் போது இந்த கிழவிய வந்து பாத்தியான்னு இரு. என்ன புரியுதா?


என்று கோபமும் வெறுப்பும் கலந்து அழுத்தமாக சொன்னாள் அப்பத்தா. அதன் பிறகு நான் அதைப்பற்றி அப்பத்தாளிடம் எதுவும் பேசவில்ல. 


மறுநாள் காலை குளிப்பதற்கு துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு முத்துவீர் என்னை அழைத்துசெல்லும் கிணற்றடிக்கு சென்றேன். கிணற்றில் தண்ணீர் இன்னும் ஆழத்திற்கு சென்றிருந்தது. சிறுவயதில் அதில் முத்திவீர் பல சாகங்கள் நிகழ்த்திக் காட்டுவான். நான் கையோடு கொண்டு சென்ற கப்பில் அள்ளி அள்ளி குளிப்பேன். இன்று அதில் மோட்டார் பொருத்தப்பட்டு இருந்தது. 


இப்படியாக மகிழ்ச்சியாக அப்பத்தாளின் அறையிலிருந்து என்னை காப்பாற்றிக்கொண்டு  இருந்துவிட்டு அப்பாவிடம் சென்று விடைபெற்று விடுமுறையை முடித்துக்கொண்டு ஊர் கிளம்பிவிட்டேன். அப்பத்தாளின் காதல், முத்துவீரின் மரணம் மனதிற்கு ஓடிகொண்டே இருந்தது. அதுவும் அப்பத்தாளின் அந்த பசுமை மாறா காதல் அழகு.


வந்து சில மாதங்களுக்கு பிறகு எப்பொழுதும் போல அப்பாவிற்கு அழைத்து பேச எண்ணி தொடர்புகொண்டேன்.


அப்பா! நான்தான் பேசுறேன்! நல்லா இருக்கீங்களா?

நல்லா இருக்கேன் தம்பி! வீட்ல பசங்க என்ன பண்றாங்க?

எல்லாரும் நால்லா இருக்காங்கப்பா! அங்க வீட்ல அம்மா, தங்கச்சி  எல்லாரும் எப்படிப்பா இருக்காங்க? அப்பத்தா கிட்ட பேசினீங்களா!

அட அத ஏன்பா கேக்குற? கிழவிக்கு புத்தி கெட்டுபோச்சு!?

ஏன் என்னப்பா ஆச்சு? 
     
காலம் போன கடைசியில் கிழவி அந்த கீழத்தெரு ராமையாவ போன வாரம் வீட்டுக்கு கூட்டி வந்து இனிமே நாங்க சேர்ந்து வாழப்போறோம்னு நிக்கிது?

தூக்கிவாரிப் போட்டுடிடுச்சு எனக்கு. என்னமா இந்த வயசில போயி இப்படி சொல்றன்னு கேட்டதுக்கு 

ஆமாடா! ஆசபட்டப்ப வாழ விடல, இப்ப எல்லாரும் என்ன தனியா விட்டு வந்துடிங்க. எனக்கு துணைக்கு ஒரு ஆள் வேணாமா? ன்னு கேட்டுச்சு 

ஆத்தா சொல்றதும் நியாயம் தானே! சரின்னு சொல்லிட்டேன்.

எனக்கு ஒருபக்கம் ஆச்சர்யமாகவும் பயமாகவும் இருந்தது. அப்பத்தாவின் தொலைபேசி எண்ணை தேடி எடுத்து பேச அழைத்தேன்.

அப்பத்தா! நான் தான் பேசுறேன்!



சொல்லுயா ராசா நல்லா இருக்கியா? 


என்ன அப்பத்தா இப்படி பண்ணிடீங்க?


என்ன பண்ணேன்! நீ சொன்னது என் மனசுலேயே தங்கிடுச்சு! ஆமா, என்ன தப்பு? நான் பெத்தது ரெண்டும் அவனவன் இங்க பத்து நாள் அங்க பத்து நாள்ன்னு அலைய்விட்டானுங்க. கடைசில இங்க கொண்டு வந்து ஒத்தையில விட்டுட்டு போயிட்டானுங்க. 


நீ சொன்னது தான் ராசா சரி இவனுகள பத்தி இனி நான் ஏன் கவலைபடனும். அதான் நேரா போனேன் அவுககிட்ட பேசினேன். பேசினதுமே ஒரே அழுக. இத்தன நாளா எனக்காகத்தான் அவுக கல்யாணமே செஞ்சுக்காம இருந்திருக்காக. சரின்னு முடிவு பண்ணி ரெண்டு பெரும் ஊரு மத்தியில இருக்குற கோயிலுக்கு போய் அவுக என் கழுத்தில மாலய போட்டு கூட்டிட்டு வந்துடாக. ஊருக்காரவுக எல்லாம் கூடி ஒரே கலாட்டா! அவுக ஆளுக நம்ம ஆளுகன்னு கூடி சண்டைக்கு வந்தாக. இந்தா பாருங்க இனிமேயும் உங்க சாதி எங்கள ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லி விடு விடுன்னு நேரா வீட்டுக்கு வந்துட்டோம். பொறவு உங்கொப்பன் வந்து தான் எல்லாத்தையும் சரிகட்டுனான்.

மறுமுனையில் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருந்தேன்.

எனக்கு பேச எதுவுமே இல்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் நான்


சரி அப்பத்தா இனி என்ன செய்யாலாம்னு இருக்க?

ஆங், நாள மருநா ஏலகிரி போறோம். தேன்நிலவுக்கு!

என்று கிண்டலாய் கூறிவிட்டு என் அழைப்பை துண்டித்தாள் அப்பத்தா.     


அ. மு. நெருடா       
   

54 comments:

  1. கதை நல்லா வந்திருக்கு! என் வாழ்த்துகள்! தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். சில கருத்துகள் உண்டு. பிறகு வந்து சொல்கிறேன். (மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் பார்க்கணும்ல?) வாழ்த்துகள் சொல்லவே வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பா, உங்கள் வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

      Delete
  2. வாழ்த்துகள்.....கதைபடிக்கவில்லை...மீண்டும் வந்து படித்து கருத்து சொல்கிறேன்

    ReplyDelete
  3. subramanian madhavan has left a new comment on your post "வெள்ளாயி - சிறுகதை":

    கதை நன்றாக உள்ளது.... தற்காலப் பொருத்தப்பாட்டோடு கதை முடிந்திருக்கிறது ....

    சிறந்த கதையாசிரியராய் மிளிர்வதற்கான 'கூறுகள் ' பல இடங்களில் பளிச்சிடுகின்றன ...

    விரிவாய் அடுத்த பதிவில் எழுதுகிறேன் ...
    நெருடாவின் கதை நெருடுகிறது ....

    எனவே , இது நெருடாக் கதையல்ல ...
    நெருடாவின் நெருடும் கதை ...

    ஒளிரும் கதைமரபில் துளிர்க்கும் உங்களுக்கு என் அன்பில் சிலிர்க்கும் நல்வாழ்த்துக்கள் ...!
    பாராட்டுக்கள் ...!!

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி.

      Delete
  4. ஆத்தி..அருமை....மனதை தொடும் வரிகள்... ஊருக்கு போறேன் னு சொன்னதும் அப்பத்தாவின் நடுக்கத்தை நானும் உணர்ந்தேன்.முதல் கதையே பெண்ணுக்கு ஆதரவாக...ஆமா..அப்பத்தான் ராமையா வை கூட்டி வந்துவிட்டது ஒன்றதுஉடனே மகிழ்ச்சி தானே வரனும்..வாழ்த்தாம ஏன் இப்படி பண்ணிட்டீங்க என் கேட்டபோது நெருடுது பா...மற்றபடி கதை சூப்பர்.வர்ணனை அழகு....முதல் கதை மனதை தொடுவதாக, அமைந்துள்ளது மகிழ்ச்சி வாழ்த்துகள் தொடருங்கள் பா...

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி.

      Delete
  5. முதலில் நெருடாவிற்கு வாழ்த்துகள்.
    கதைக்கு கால் கிடையாது என்பது சொலவடை ..ஆனால் ஈரமான மனசு இருக்கிறது..கிராமத்து ஏக்கங்கள் எப்படியெல்லாமோ வெளிப்பட்டிருக்கிறது..
    முதல் கதையாய் தெரியாத அளவிற்கு நடை விறுவிறுப்பு..
    நம்மையறியாமல் கிழவுயின் சேட்டைகளில் சிரிக்கிறோம்..
    அழுகிறோம்...கடைசியில் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடத்துவங்கி விடுகிறோம்..
    ஆனால் நெருடா...தேனிலவெல்லாம் போவதை வாசிக்கும் போது..உங்கள் அப்பாவின் குறும்பைத்தான் பார்க்கிறேன்..

    நீங்கள் விளைந்த மண்ணல்லவா...அதுதான் வார்த்தைகளும் ஆசைகளுமாய் பூத்துக்குலுங்குகிறது.

    கருவிற்குள் ஒரு குறையுமில்லை...காட்டாற்று வெள்ளமாய் ஓடியிருக்கும் உங்கள் கதையோட்டத்தில் சில அழிமானங்கள் வரும் தான்...வந்தால் தான் என்ன...
    மேலாண்மை வாரியமொ,மேற்பார்வை வாரியமோ...என்ன பெயரில் வந்தாலும் தண்ணீர் வந்தால்ன்போதும் என்ற நிலையில், உங்கள் கதை ஜீவஉற்றாய்தான் இருக்கிறது..

    மீண்டுமொருமுறை வாழ்த்துகள் நெருடா..
    கதைக்கு ஒருமுறையும்...அந்தப்பாட்டியின் சார்பில் மறுமுறையும்...

    ReplyDelete
  6. அருமை முதல் கதை போலவே தெரியவில்லை.எதிர்பாராத புரட்சி முடிவு. சிறப்பான நடை .தங்கள் தந்தையாரைப் போலவே பெயரும் புகழும் பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி

      Delete
  7. நல்லதொரு முடிவு. இப்படித் தான் முடியப் போகிறது என யூகிக்க முடிந்தது.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி

      Delete
  8. முதலில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச்சிறுகதை உலகில் ஒரு கதாசிரியனாக, கம்பீரமாக நுழைந்ததற்கு என் வாழ்த்துகளைச் சொன்னேன். அப்புறம் தந்தை மகற்கு ஆற்றும் நன்றியைச் செய்தேன்.
    இப்போது விமர்சனம் –
    நம் – பிராமணரல்லாத, தமிழர் – வீடுகளில், பாட்டியை அவள் இவள் என்று சொல்லும் வழக்காறு இல்லை. அது ஐயமார்களின் வழக்கம். இரண்டாவது உணர்ச்சி பூர்வமான சில இடங்களைச் சாதாரணமாகக் கடந்து போவது வாசகர் இயல்பாகக் கதையைக் கடப்பதில் சிரமத்தைத் தரும்…
    “முத்துவீரு இறந்துட்டானா?!!!” என்ற கேள்வியோடு அவன் எழுந்து பதறவேண்டும். அப்படியேதும் இல்லாததும் ஆணவக் கொலையைப் பற்றிய இயல்பான எதிர்க்குரல் வரவேண்டிய இடத்தில் ஒன்றுமில்லாமல் கடப்பதும் குறையே. பாட்டி காலத்துக் காதல்கொலைகள் இப்போது சாதிஆணவக் கொலையாகியிருப்பதை மறந்துவிட வேண்டாம். நகரம் கிராமம் வெளிநாடு என்றெல்லாம் இதில் தப்பிக்க முடியாது. நீண்ட நெடிய போராட்டம். பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைப் பொறுத்தும் அவர்கள் நிலைத்துநிற்க எப்படிப் போராடுகிறார்கள் என்பதுமே மையப் புள்ளி. அதில் இன்னும் அழுத்தமாக வந்திருக்க வேண்டிய, கதைப்பின்னல் அமையவில்லை
    பேச்சுவழக்கில் இரட்டை (அ) ஒற்றை மேற்கோள் குறி அமைப்பது வாசிப்பவர்க்கான உதவி. தேவையறிந்து பயன்படுத்த வேண்டும்.
    கதையில் வரும் மனைவிக்கு இதில் உள்ள பங்கும் தெரியவில்லை என்பது பாத்திரப் படைப்பில் விழுந்த குறை. அது விரிவுபட்டால் வெளிச்சம் தரும்.
    ஒவ்வொரு வார்த்தைக்குப்பின்னாலும் அவர் வர்க்கம் இருப்பது உறுதி. அதை உணர்ந்து பயன்படுத்துவதில் கதையாளன் வெற்றி அமையும். பெயர்களுக்கும் கூட பின்னணி உண்டு. பு.பி, ஜெ.கா, கந்தர்வன் பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன் மேலாண்மை, அழகியபெரியவன் கதைகளில் இது கிடக்கும். தேடிக் காண்க.
    இன்னும் நிறையப் படித்து, அதற்காகப் படித்துக் கொண்டே இருந்துவிடாமல் தொடர்ந்து எழுதி, தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் நிற்கும் சில சிறுகதை களையாவது தர என் இனிய வாழ்த்துகள் பா! என் தோள்கள் உனக்கான உயரத்தை அடைய உதவுமெனில் அதைவிட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி?

    ReplyDelete
    Replies
    1. விரிவான விமர்சனத்திற்கு நன்றி பா. உங்கள் அனைவரின் வழிகாட்டுதலோடு அவசியம் தொடர்ந்து படித்து, எழுதி தெரிந்துகொள்கிறேன்.

      Delete
  9. திடீரென்று கதையில் திருப்பம் எனக்கு என்னை அறியாமல் சிரிப்பு வந்தது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இறுதிக்காலத்தில் நிச்சயம் ஒரு துணை தேவை. கதை ஓட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  10. அப்பத்தா எனும் பேரழகி!

    //சொல்லச்சொல்ல அப்பத்தாவின் குரலில் வயது குறைந்து கொண்டே வந்தது...//

    அழகு. மனதிற்கு வயதாவதில்லை.

    இது உடலுக்கான காதல் (காமம்) இல்லை. மனத்துக்கான காதல்.

    அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  11. அன்புள்ள நெருடா..

    வணக்கம். உங்களின் முதல் பிரசவம். அருமையாக வந்துள்ளது. உங்களுக்குக் கதை எழுத வருகிறது. கதைசொல்லும் உத்தியும் அழகானது. தேவையற்ற சொற்கள் இல்லாமல் சொல்லவேண்டியதை வாழவேண்டிய வாழ்க்கையோடு சொல்லியிருப்பது அது தந்தைவழி சொத்து. காப்பாற்றிக்கொள்ளுங்கள். கதையின் பொருண்மை சற்று மாறுபட்டது. இப்படியொரு சிந்தனை ஒரு பேரனுக்கு அதுவும் தன் பாட்டியின் காதலை நிறைவுற வைக்கும் மனப்பாங்கு மாறுபட்ட படைப்புச்சிந்தனையைக் கொணர்கிறது. காதல் என்பது மனது சம்பந்தப்பட்டது என்பதை அற்புதமாக உணர்த்துவது உங்கள் சிறுகதை. வாழ்த்துகள். சில இடங்களில் நன்கு அனுபவப்பட்ட படைப்பாளியின் தெறிப்பு தெரிகிறது. இது வரம்தான். அப்பத்தாளின் காது மடலை மென்மையான கொழுப்பிற்கு உவமைப்படுத்தியிருப்பது புதிதாக உள்ளது. வெற்றிலைக்காக இடிக்கப்படும் கொட்டில் கோவித்துக்கொள்வதில்லை என்கிற வரிகளும் நன்றாக உள்ளது. சுவையானது. அவங்கஅவங்க போயிட்டிங்க.. நான் ஒத்தையில வாழறேங்கறது இன்றைய வாழ்க்கைமுறையில் முதியவர்களைக் கவனிக்காமல் விட்டுவிட்ட நம்முடைய குற்றஉணர்வை புதுப்பிக்கிறது என்றாலும். அதில் ஒரு குடும்பத்தின் வரலாறே உள்ளது. பண்பாட்டின் நிகழ்வு அது. என்றாலும் அந்த சின்ன ஆதங்கத்தில் அப்பத்தாளுக்குள் ஒரு காதலை உருவாக்கி, அதனை நிறைவேற்றும் பொறுப்பைப் பேரனாக எடுத்துக்கொண்டது நல்லதொரு படைப்பாளியின் தொடக்கம். தமிழுக்கு நல்ல படைப்பாளியாக நீங்கள் வருவீர்கள். வாழ்த்துகள் மறுபடியும்.
    தன் காதல் எப்படியோ அப்படியே உணர்வு மிக்கது அப்பத்தாளின் காதலும் என்று உணர்த்தும் இச்சிறுகதை கவனிக்கப்படவேண்டிய தளத்திற்கு வருகிறது.
    தொடர்ந்து இயங்குக. என்றாலும் ஒரு தமிழ்ப் பேராசிரியராக இருப்பதால் சிலவற்றைச் சுட்டவேண்டிய கடமையும் எனக்குள்ளது.

    தந்தையார் அவர்கள் அறிவுறுத்தியது போல ஜெயகாந்தன், பிரபஞ்சன், பூமணி, கோணங்கி, ஜெயமோகன், மேலாண்மை, சுந்தரராமசாமி என இப்படியான பட்டியல் நிறைய உண்டு. அவற்றை அவசியம் பாகுபாடில்லாமல் எல்லாவற்றையும் வாசித்தால் அவற்றின் பாகுபாடு உங்களுக்குத் தெளிவைத் தந்துவிடும். மேலும் நிறைய இடங்களில் ஒற்றுப்பிழைகள் உள்ளது. இது கதைக்குத் தேவையா எனப் பலர் நினைப்பதுண்டு. என்றாலும் தமிழில்கதை எழுதும்போது தேவையென நினைக்கிறேன்.
    அணில் கொரித்த அல்ல கொறித்த
    முனுமுனு அல்ல முணுமுணுத்த
    சில ஒற்றுப்பிழைகள்... குளிப்பதற்குத்.... கிணற்றடிக்குச்... ஆழத்திற்குச்,
    உரையாடலில் ஒற்றுப்பிழைகள் பார்க்கவேண்டியதில்லை ஆனால் விவரிப்பில் ஒற்றுப்பிழை தவிர்க்கப்படவேண்டும் என்பது என் கருத்து.
    உங்களின் திரண்ட வாசிப்பில் சிறந்த எழுத்தாளராக வருவதற்குரிய அத்தனை தகுதிகளும் உள்ளதை இந்த முதல் கதை நம்பிக்கையோடு உணர்த்துகிறது.

    மனம் நிறை வாழ்த்துகள் நெருடா.

    ReplyDelete
    Replies
    1. ஆகா! படித்த பேராசிரியர் என்பதோடு, பழுத்த எழுத்தாளர் என்பதையும் காட்டி அருமையான கருத்துரையிட்டமைக்கு என் வணக்கமும் நன்றியும்.
      தங்களின் வாசகங்களில் பேராசிரியர், எழுத்தாளர் என்பவற்றையும் தாண்டிய ஒரு தந்தையின் அக்கறை தெரிந்தது அய்யா! உங்களின் சரியான விமர்சனம் என் மகனுக்குப் பெரிதும் உதவும் என்று நம்பிக் கைகுவிக்கிறேன்!

      Delete
    2. தங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி அய்யா. இனி வரும் கதைகளில் அவசியம் கவனமாக தாங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை சரிசெய்து விடுகிறேன்.

      அய்யா! நானும் கரந்தைக் கல்லூரியின் முன்னாள் மாணவன் தான்.
      உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

      Delete
  12. நெருடா! பார்! பாராட்டுகள் குவிகின்றன! விமர்சனங்களை ஊன்றிக் கவனி! இன்று எனக்கு வந்த மின்னஞ்சலில் நமது சிஐடியு தலைவர் அ.சவுந்தர்ராஜன் (ஏ.எஸ்.) ascitu@gmail.com உன்னை வாழ்த்தியிருக்கிறார்.“Nalladhoru Tamil ezhuthalan enadhu nenjil therigiran.Vazhha, Valarha!”
    நன்றி கூறி எழுது! படைப்புகளையும் தொடர்ந்து எழுது!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் நன்றி கூறி பதில் எழுதுகிறேன் பா.

      Delete
  13. சிறு கதை சிறுகதையாகவே இருக்க வேண்டும் நீண்டு விட்டால் வலை உலகில் படிக்க அஞ்சுவார்கள் நானே நீளம் பார்ட்து பிறகு வரலாம் என்றிருக்கிறேன் ஆணவக் கொலை காலங்காலமாகைருப்பது இன்னும் தொடர்கிறதுவருத்தம்தருவது

    ReplyDelete
  14. மாப்பிள்ளை, மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து எழுத்துலகில் தடம் பதிக்க வாழ்த்துகள்... நிறையக் கதைகள் படிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாமா! அவசியம் படிக்கிறேன்.

      Delete
    2. ரவி! முகநூலில் கதையை உரிமையோடு பகிர்ந்திருந்ததை நெருடா அனுப்பியிருந்தார். ரொம்ப மகிழ்ச்சிப்பா… 30ஆண்டுக்கு முந்தி நமது படைப்புகள் அச்சேறிய போதான உணர்வுகள் திரும்புது இல்ல…?

      Delete
  15. மிகவும் நன்று... தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  16. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நெருடா அவர்களுக்கு,

    உங்கள் தந்தை என் பெருமதிப்புக்குரிய (மனதளவிலான) ஆசிரியர். அவர் பரிந்துரைத்ததால்தான் உங்கள் தளத்துக்குச் சும்மா வந்தேன்; சும்மா படித்துத்தான் பார்ப்போமே என்றுதான் படிக்கத் தொடங்கினேன். ஆனால், இப்படி ஒரு கதையை எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தே பார்க்கவில்லை! ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால் - அசத்தல்!

    பாட்டி, ஊர்ப்புறம், இயற்கை எனத் தொடங்கிய கதையின் முதல் வரிகள், இது வழக்கமான ஊரகப் பெருமை பேசும் கதை என எண்ண வைத்தது. ஆனால், போகப் போகக் கதையின் நிறம் மாறி, முடிவு மலைக்க வைத்தது. இப்படி ஒரு கதை எழுதவே முதலில் துணிவு வேண்டும்! பண்பாட்டுத் தளத்தில் ஓர் அழுத்தமான அதிர்வை ஏற்படுத்தக்கூடிய இப்படைப்பை நீங்கள் இதழ் எதிலாவது எழுதியிருந்தீர்களானால் மிகச் சரியான உயரத்தைத் தொட்டிருக்கும் என்பது என் பணிவன்பான கருத்து.

    இக்கதையின் தனிச் சிறப்பே, சாதிய அமைப்புக்கு எதிரான உங்கள் கருத்தை முந்தைய தலைமுறைக் கதைமாந்தர் ஒருவர் மூலம் நீங்கள் முன்வைத்திருப்பதுதான். பொதுவாக சாதி, சமயம் போன்ற பழமைகளுக்கு எதிராகப் படைப்புகளை எழுதுபவர்கள் ஓர் இளந்தலைமுறைக் கதைமாந்தர் மூலம்தான் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். ஆனால், இங்கே மாற்றம் இரண்டு தலைமுறைக்கு முந்தைய கதைமாந்தர் மூலம் முன்வைக்கப்பட்டிருப்பது புதுமையானதாகவும் படிக்கும் உள்ளத்தில் ஓர் இனிமையை, நன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

    எல்லாவற்றுக்கும் மேலாக, தனிப்பட்ட முறையில், இந்தக் கதை என் பெரிய பாட்டியை நினைவுபடுத்துகிறது. என் அம்மாவுக்கு அம்மா உடன் பிறந்த அக்கா, நாங்கள் ’பெரியம்மாயா’ என அழைப்போம். அவர் ஒருமுறை, நான் கேட்காமலே இது போல் தன் கதையைச் சொன்னார். இந்த அளவுக்கு வருணனைகளெல்லாம் இல்லை. போகிற போக்கில் ஓரிரு வரிகளில் சொல்லி விட்டார். அப்பொழுது அவர் சொன்ன சொற்கள் இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. இந்தக் கதை எனக்கு அவரை நினைவுபடுத்துகிறது.

    ஆனால், எனக்கு அதை ஒரு கதையாக எழுதத் தோன்றவில்லை. நீங்கள் அற்புதமாக வடித்து விட்டீர்கள்!

    இப்படி ஒரு படைப்புக்காக மிக்க நன்றி!
    தொடர்ந்து தாங்கள் நிறைய சிறுகதைகளை எழுத வேண்டுகிறேன்!
    அதே நேரம், வெறும் இணைய உலகில் எழுதுவதோடு நில்லாமல் அச்சு ஊடகங்களிலும் தாங்கள் எழுதினால் மகிழ்வேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பின் வாழ்த்திற்கு என் நன்றி. இன்னும் சிறப்பாக என்னை தயார் செய்துகொண்டு அவசியம் அச்சு ஊடகங்களுக்கு எழுதுவேன்.

      Delete
  17. எனக்கு இது கதையாகத் தோன்றவில்லை. அதற்கும் ஒரு படி மேலாக நினைக்கவைத்தது. ஏதோ எங்கள் வீட்டில் நடந்தைப் பார்த்ததுபோல இருந்தது. எங்கள் ஆத்தாவிடம் நாங்கள் பேசிய பேச்சுகளும், அவர் எங்களுக்குக் கூறிய கதைகளும் இன்னும் என் மனதில் நிற்கின்றன. நல்ல ஆரம்பத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி அய்யா.

      Delete
  18. முதலில்! நெருடா உங்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கதை மிக நன்றாக இருக்கிறது. முடிவு அருமை! கதையை வாசித்து வரும் போது எதிர்பார்க்க முடிந்தது. இந்த வயதிலும் சேர்ந்து வாழ நினைப்பதில் தவறே இல்லை.

    பல வரிகள் ரசிக்க வைத்தன என்று சொன்னால் மிகையல்ல. அது போன்று ஊரின் தன்மையை அப்பத்தாளைப் பற்றிச் சொன்ன விதம் எல்லாம் மிக மிக ரசிக்கும்படியாக இருந்தது.

    ஒரு சில கருத்துகளை இங்குச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

    உரையாடல்களை " " இப்படி இதற்குள் வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது.

    கதையில் இன்னும் கொஞ்சம் உணர்வுகள் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றியது. ஆனால் மற்றொருபுறம் யோசிக்கும் போது அந்த இளைஞர் வெளிநாட்டில் வாழ்பவர் என்பதால் உணர்வுகளை அப்படியே கடந்து செல்பவராகத்தான் பொதுவாக இளைஞர்கள் இப்போது இருக்கிறார்கள் என்பதால் அப்படியும் பார்க்கலாம் என்றாலும் கதை என்றால் கொஞ்சம் உணர்வுகள் வெளிப்பட்டால் நன்றாக இருக்குமோ?!

    மேலும் மேலும் எழுதுங்கள் நெருடா...நாங்களும் தொடர்கிறோம்...

    வாழ்த்துகள்! பாராட்டுகள்

    கீதா

    ReplyDelete
  19. வெள்ளாயி மனதில் நிற்கிறார்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

      Delete
  20. வணக்கம் நெருடா...

    முதல் சிறுகதை.

    ஒரு கதையின் வெற்றி என்பது வாசகனை கதையில் வரும் மாந்தர்களோடு பொருந்திப் போகச் செய்வது.

    அதுதான் நெருடாவின் முதல் வெற்றி.

    மற்றதெல்லாம் இனி தன்னால் வரும்.

    எழுத்துப் பிழைகளை மட்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். (பரிச்சுபுடாதயா,பொன்னுவளுக்கு).

    வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  21. என் கருத்தில் சிறு தட்டச்சுப் பிழை.ஒற்றுப் பிழைகள் உள்ளது என்பதற்குப் Uதிலாக உள்ளன எனத் திருத்தி வாசிக்கவும்

    ReplyDelete
  22. வெள்ளாயி அன்றே வாசித்தேன்... அருமை.... வாழ்த்துக்கள்.

    முதல் சிறுகதை போலில்லாமல் தேர்ந்த சிறுகதையாய்...

    இங்கு முத்துநிலவன் ஐயா உள்ளிட்ட பல சிறுகதைச் சாம்பவான்கள் நீண்ட கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள் இனி எழுத இருக்கும் உங்கள் கதைகளைச் செம்மைப்படுத்த... அதைச் சரிவரக் கடை பிடியுங்கள்... வெள்ளாயி போல் வெளுத்துவாங்கும் பல கதைகளை எழுதலாம்...

    என்றுமே உங்கள் பாணியில் இருந்து மாறாதீர்கள்... உங்கள் எழுத்து தனித்துவமாய் இருக்கட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறுகதைகளாலேயே பலலட்சம் வாசகர்களைக் கவர்ந்து வைத்திருக்கும் சகோதரர் பரிவை சே.குமார் சொன்னால் அதில் அர்த்தமிருக்கும் நெருடா!
      பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில முதல்மதிப்பெண் எடுத்த பெரும்பாலான மாணவர் பன்னிரண்டாம் வகுப்பில் கோட்டை விடக் காரணம், ஏற்றிவைத்த கிரீடத்தைச் சுமந்துகொண்டே திரிவதுதான். உன் தலையில் நம் நண்பர்கள் ஏற்றிவைத்த கிரீடத்தை உடன் இறக்கிவைத்துவிட்டு, விமர்சனத்தை ஏற்று அடுத்த கதையை இன்னும் இன்னும் சிரத்தையோடு எழுதத் தொடங்கு!
      அப்துல்கலாம் சொல்வார் “இரண்டாவது முயற்சியும் வெற்றிபெற்றால்தான் முதல் முயற்சியின் வெற்றிக்கான காரணம் வெறும் அதிர்ஷ்டமல்ல என்று இந்த உலகம் நம்பும்” நான் சொல்வது புரிகிறதா? புரியும் புரிய வேண்டும்.
      அதற்காக அஞ்சி, தயங்கவேண்டியதில்லை! உன்னை நம்பியே எழுதலாம்!
      (இரவு ஒரு நிகழ்ச்சி முடித்து, இப்பத்தான் வீடு வந்தேன்! மணி விடிகாலை 4.15 என்றாலும் உன் வலைப்பக்கம் வராமல் எனக்குத் தூக்கம் வராதே!)

      Delete
    2. அவசியம் அப்பா. தலைக்கு ஏற்றாமல் கையில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு என் அடுத்த படிப்பில் கவனம் செலுத்துவேன். தலயில் குட்ட வசதியாய் கையில் வைத்துக்கொள்வதே சரி.

      Delete
  23. தமிழ்ச் சிறுகதைக் களத்தில் தொடக்கக் கதையிலேயே முத்திரை பதிக்க முனைந்த புலிக்குட்டிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். சமகால சமூகப் பிரச்சனையைக் கதைக்கருவாக்கி ஒரு குறுங்காவியமாகப் படைத்துள்ளமைக்குப் பாராட்டுகள்.


    கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு வாசிப்பாளரை துடிப்புடன் தொடர வைப்பதாக இருப்பதுதான் இந்தக் கதையின் வெற்றி.
    இக்கால கவுரவக் கொலையின் அவலத்தை இரண்டு தலைமுறைக்கு முன் நடந்த முத்துவீர் காதலுக்கு நடந்த மரணத்தோடு இயைபு படுத்திக் காட்டியுள்ள உத்திக்கு ஒரு சொட்டு.
    முதல் சிறுகதையின் தலைவியாக ஒரு பெண்ணை மையப்படுத்தியிருப்பதுவும், “வெள்ளாயி” என கதைக்குத் தலைப்பிட்டிருப்பதுவும் பெண்ணியச் சிந்தனையாளரின் வாரிசாக படைப்பாளரை அடையாளம் காட்டியுள்ளது பெருமைக்குரியது.
    உரையாடல்களை சாய்வெழுத்துகளாகவும் கதை நடப்பினை இயல்பான எழுத்துருக்களாகவும் அமைத்த உத்தி நன்று.
    ஆனாலும் இத்துறையில் நெருடா வளர வேண்டுமென ஆவல் கொண்டவன் என்ற முறையில் செப்பனிடப்பட வேண்டிய சிலவற்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.
    கதை நிகழ்வுகளின் தொகுப்புகளில் முன் பின்னாக சில பிறழ்வுகள் வாசிப்பாளரைத் தேக்குகின்றன. சிறுவயதில் அப்பத்தா 87 வயது அப்பத்தா தோற்ற வருணனையில் கொஞ்சம் முரணாக உள்ளது.ராசா கல்யாணத்துல கொடுத்த சேலை இது என அப்பத்தா சொல்வது கால மிகையாக இல்லையா? கதை சொல்லியின் மனைவி பாத்திரம் ஒப்புக்குப் புகுத்தப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். காதலுக்கு அந்தக்காலத்தில் எடமே இல்லை விசத்தைக் கரைச்சுக் கொடுத்துக் கொன்னுடுவாங்கன்னு சொல்ற வெள்ளாயி இப்ப கவுரவத்துக்காக நடுரோட்டுல வெட்டிப் போடுறாங்கன்னு அதே பத்தியில சொல்றதும் சாதி கவுரவத்துக்குப் பயந்து காதலை மறுத்த இராமையாவை அறைஞ்ச வெள்ளாயி, காதலுக்காக பெற்றவர்களை எதிர்த்துப்
    போராடியதாகவோ அதற்கேற்பட்ட தடைகளெதுவும் குறிப்பிடப்படாமல், ”வாழுற வயசுல வாழவிடாம இப்ப வந்துட்டியா” என பெயரனிடம் கேட்பதுவும், இன்னொருவரைக் கட்டிக்கிட்டு ரெண்டு பிள்ளைகளைப் பெத்துக்கிட்டதாகச் சொல்லும் வெள்ளாயி “ஆசைப்பட்டப்ப வாழவிடலே, எனக்குத் துணைக்கு ஆள் வேண்டாமா?” என்று மகனிடம் கேட்பதையும் அத்தனை எளிதாகக் கடந்து போக முடியவில்லை.
    கணவனை இழந்து பிள்ளைகளால் கைவிடப்பட்ட பிறகு கீழத்தெரு இராமையாவை முதுமைகாலத் துணைக்கு இருபக்க எதிர்ப்பிற்கு இடையில் திருமணம் செய்து கொண்ட முடிவில் கதை திலகமிட்டுள்ளது.ஏற்காடு தேனிலவு கருத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். எதிர்காலத்தில் இன்னும் சுண்டக் காய்ச்சிய பாலாக சமூக அவலக் கசப்புகளைக் கற்கண்டுகளாக மாற்றும் படைப்புகளை அ.மு.நெருடாவிடம் எதிர்பார்க்கிறது தமிழிலக்கியக் களம்.

    ReplyDelete
    Replies
    1. பாவலர் அய்யா பொன்.க., உன் தந்தைபோன்றவர்! 50ஆண்டுக்கும் மேலாக வானொலியில் ஏராளமான நாடகங்களை அரங்கேற்றி வெற்றிக்கொடி நாட்டியவர்! எழுத்து, இசை, வசனம், இயக்கம் எனப் பல்துறைச் சாதனையாளர் மட்டுமல்ல, 75வயது கடந்தும், கொள்கைக் குன்றாகத் திகழும் எனது முன்னோடியும் கூட! அவரது வாழ்த்தும் அடக்கமாக விமர்சனமும் நீ அவசியம் கவனத்திற் கொள்ள வேண்டியவை நெருடா! வாழ்த்துகள்!

      Delete
    2. அறிவொளி காலத்தில் மாமா பொன்.க. அவர்களின் பாடல்களை மறக்கமுடியுமா? இன்றும் அவரது குரல் என் நினைவுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது அப்பா.

      Delete
    3. நன்றி மாமா. அவசியம் தொடர்ந்து வரும் எனது அடுத்த படைப்புகளில் தாங்கள் கூறிய அறிவுரைகளை மனதில் ஏற்றி கவனமாக எழுதுகிறேன்.

      Delete
    4. "உழைக்கின்ற மனிதா நீ உயர்வாவது எப்போது" படலை மாமா பாடும்பொழுது
      கூடவே நானும் "தையர தையர தர தர தையர தையர" எனப் பாடியது இன்றும் நினைவில் இருக்கிறது.

      Delete
    5. இன்னும் என்னை நினைவில் வைத்திருப்பமைக்கு நன்றிகள். தொடரட்டும் படைப்புப் பணி.

      Delete
  24. இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியிட்ட இந்த கதையை மிகவும் இரசித்து நீண்ட கருத்துரை இட்டேன்.

    பிறகு பதிவையே நீக்கி விட்டீர்கள் காரணம் அறியாது இருந்தேன்.

    மீண்டும் வெளியிட்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  25. From: Udhayasankar K
    Date: 2018-04-03 13:40 GMT+05:30
    Subject: Re: என் மகன் எழுதிய சிறுகதை
    To: Muthu Nilavan
    கதை நன்றாக இருக்கிறது. சிறந்த சிறுகதையாசிரியாக வருவதற்கான அனைத்து கூறுகளும் இருக்கின்றன.நிறைய வாசிக்கும்போது இன்னும் நுட்பம் கூடும். வாழ்த்துக்கள்
    - உதய சங்கர், எழுத்தாளர், கோவில்பட்டி

    ReplyDelete
  26. "அப்பத்தா" இந்த சொல்லே இப்பொது ஏறத்தாழ அழிந்து வரும் நிலை .கதை பூராவும் கிராமீய சூழல். எளிமையான நடை.....மாமரம் பற்றிய நினைவுகள் ..... கிராம வாழ்க்கையை நினைவு படுத்தி என் பழைய கால நினைவலைகளை கிளறி விட்டது . இந்த எழுத்தாளருக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.நடையில் இன்னும் கொஞ்சம் மெருகு ஏற்ற வேண்டும். அதற்கு நிரம்ப படிக்கவேண்டும்.வாழ்த்துக்கள். தொடர்க ..இன்னும் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete